மம்தா போராட்டம் எதிரொலி : மே.வங்க நிலவரம் குறித்து மத்திய அரசுக்கு ஆளுநர் அறிக்கை!

மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் தர்ணா போராட்டத்தைத் தொடர்ந்து, மாநிலத்தில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து அம்மாநில ஆளுநர் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளார்.

சிபிஐ நடவடிக்கைக்கு எதிராக நேற்று முதல் மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் மே.வங்கத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இதைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், மே.வங்க ஆளுநர் கேசரிநாத் திரிபாதியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்தார். மேலும் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்புமாறும் வலியுறுத்தினார்.

இன்று காலை மே.வங்க தலைமைச் செயலாளர், போலீஸ் டிஜிபி ஆகியோரை அழைத்து ஆளுநர் திரிபாதி ஆலோசனை நடத்தினார்.சம்பந்தப்பட்ட சிபிஐ அதிகாரிகளும் ஆளுநரை தனியாக சந்தித்தனர். இதன்பின் மத்திய அரசுக்கு ஆளுநர் திரிபாதி அறிக்கை அனுப்பினார்.

மம்தாவின் போராட்டம் நீடிக்கும் நிலையில் ஆளுநர் அறிக்கை அடிப்படையில் மம்தா அரசுக்கு எதிராக மத்திய அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று கூறப்படுகிறது. ஒரு வேளை அரசைக் கலைத்து ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டாலும் ஆச்சர்யமில்லை என்றும் தகவல்கள் வெளியாகி பரபரப்பு நிலவுகிறது.

More News >>