`ஆதார் கார்டுக்காக தகராறு - மிளகாய் பொடி தூவி மனைவியை கொல்ல முயன்ற கணவன்!

சென்னை அரும்பாக்கத்தில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மிளகாய் பொடி தூவி அவரை கணவன் கொலை செய்ய முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். கட்டிட தொழிலாளியான இவருக்கு தேவி என்ற மனையும் இரண்டு மகள்களும் உள்ளனர். மனையுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார் ரமேஷ். இந்தநிலையில் இன்று காலை தேவி மட்டும் தனியாக இருந்தபோது வீட்டுக்குச் சென்றுள்ளார் ரமேஷ். அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்ற ஆத்திரத்தில் தேவி மீது மிளாகாய் பொடியை தூவிய ரமேஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை சரமாரியாக குத்தியுள்ளார்.

கத்தியால் குத்தவும், தேவி வலியால் அலற அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் அங்கு விரைந்துள்ளனர். அக்கம்பக்கத்தினர் வருவதை அறிந்து ரமேஷ் தன் கையையும் அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். சம்பவம் குறித்து அரும்பாக்கம் போலீசார் தேவி வீட்டுக்கு விரைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த இருவரையும் மீட்டனர். அவர்கள் இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எதற்காக ரமேஷ் மனைவியை கொலை செய்ய முயற்சித்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவரின் ஆதார் கார்டு தேவியிடம் இருந்ததால் அதனை வாங்க காலை வீட்டுக்கு வந்துள்ளார். ஆதார் கார்டு கேட்ட போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படவே ஆத்திரத்தில் தேவி மீது மிளகாய் பொடி தூவி அவரையும் கொலை செய்து தன்னையும் தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

More News >>