`யூ-டர்ன் முதல்வர் கட்சியை அபகரித்தவர் - சந்திரபாபு நாயுடுவை வறுத்தெடுத்த அமித் ஷா!

சந்திரபாபு நாயுடுவுக்கு இனி கூட்டணி கதவு திறக்காது என பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை விமர்சித்துள்ளார் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா. ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் இன்று நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார் அமித் ஷா. அப்போது பேசியவர், ``சந்திரபாபு நாயுடு காங்கிரஸ் கட்சியில் இருந்து தன் வாழ்க்கையை தொடங்கியவர். காங்கிரஸ் கட்சி தோற்றபிறகு என்.டி.ராமராவுடன் இணைந்தார். என்.டி.ஆர் முதுகில் குத்தி அவரிடம் இருந்து கட்சியை பறித்தார். மத்தியில் வாஜ்பாய் தலைமையில் ஆட்சி அமைந்தபோது சந்திரபாபு நாயுடு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் வந்து இணைந்தார். 2004-ல் தேசிய ஜனநாயக கூட்டணி தோற்றதும் காங்கிரஸில் ஐக்கியமானார்.

இதன்பின் 2014-ல் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வந்தார். இப்போது காங்கிரஸை ஆதரிக்கிறார். கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் பெரிய அளவில் ஜொலிக்காமல் இருந்தவர், மோடி இல்லாமல் அதிகாரத்துக்கு வரமுடியாது என்பதை உணர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வந்தார். தெலங்கானா தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்தார். தேர்தலில் தோல்வியுற்றவுடன் மெகா கூட்டணி என்று கூறி வருகிறார்.

வரும் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் மீண்டும் எங்களுடன் இணைய முயற்சி செய்வார். இப்போது உங்களிடம் ஒன்று சொல்கிறேன். இனி தேசிய ஜனநாயக கூட்டணியின் கதவு சந்திரபாபு நாயுடுவுக்காக திறக்காது. அவரை யூ-டர்ன் முதல்வர் என அழைப்பதே சரியாக இருக்கும். ஆந்திர மக்களை தவறாக வழிநடத்தி வருகிறார். அவரின் ஆட்சியின் மக்கள் மீது அதிருப்தி அடைந்ததும் அவர் மகனை முதல்வராக மாற்ற மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததும் பா.ஜ.க மீது பழியை போட்டுவிட்டு காங்கிரஸில் இணைந்துகொண்டார்.

சந்திரபாபு நாயுடுவிடம் ஒரே ஒரு கேள்வி தான் எனக்கு கேட்க வேண்டியுள்ளது. ஆந்திராவுக்கு பா.ஜ.க ரூ.5,56,000 கோடி அளவுக்கு நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளது. காங்கிரஸோ வெறும் ரூ.1,17,000 கோடி அளவுக்கு மட்டுமே ஆந்திராவுக்கு திட்டங்களை ஒதுக்கியது. இவ்வளவு நன்மை செய்த பாஜகவை விட்டு ஏன் காங்கிரஸில் இணைந்தீர்கள். காங்கிரஸ், தெலுங்கு தேசம் என இரண்டு கட்சிகளுமே ஊழல் கட்சி தான்" என்று கடுமையாக விமர்சித்தார்.

 

More News >>