நடத்தையில் சந்தேகம் - பஸ் ஸ்டாண்டில் வைத்து மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்!
விராலிமலை அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து அவரை சரமாரியாக குத்திக்கொன்ற கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள கொன்னகாட்டுபட்டியை சேர்ந்தவர்கள் வேலுச்சாமி லதா தம்பதியினர். சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்த இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இரண்டு குழந்தைகள் பிறந்த பின்பும் லதாவின் நடத்தையில் சந்தேகமடைந்து அவருடன் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார் வேலுச்சாமி. இதனால் லதா கோபித்துக்கொண்டு அவரது அம்மா வீட்டிற்கு செல்வது வழக்கமாகி இருந்து வந்துள்ளது. சமீபத்தில் ஏற்பட்ட தகராறால் குழந்தைகளை அழைத்து கொண்டு தனது அம்மா வீட்டுக்கு சென்றுள்ளார். ஆனால் இந்த முறை கணவன் வீட்டுக்கு திரும்பாமல் அங்கேயே இருந்துள்ளார். மேலும் விராலிமலை பஸ் ஸ்டாண்டில் உள்ள பேன்சி ஸ்டோரில் வேலைக்குச் சேர்ந்துள்ளார்.
நேற்று காலை லதா வேலைக்குச் சென்றுள்ளார். வேலுச்சாமியும் அதே பஸ் ஸ்டாண்டின் அருகே பூக்கடை நடத்தி வருகிறார். லதா வேலைக்குச் செல்லும் விஷயத்தை அறிந்து பேன்சி ஸ்டோருக்கு சென்றுள்ளார். அங்கே இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த வேலுச்சாமி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு பேன்சி ஸ்டோரிலேயே லதாவின் கழுத்தில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த லதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கொலை குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். அதற்கு முன்னதாகவே வேலுச்சாமி போலீசில் சரணடைந்தார். அங்கு வந்த லதாவின் தாய் மற்றும் குழந்தைகள் அவரின் உடலை பார்த்து கதறி அழுதனர். பட்டப்பகலில் பேருந்து நிலையத்தில் வைத்து நடந்த இந்தக் கொலை சம்பவம் விராலிமலை பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.