இதில் ஏன் சர்ச்சைகள் வருகின்றது புரியவில்லை - பினராயி முடிவுக்கு ஆதரவு தெரிவித்த விஜய் சேதுபதி!
சபரிமலை விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
நடிகர் விஜய் சேதுபதி தமிழை தவிர்த்து தெலுங்கில் சிரஞ்சீவியுடன் `சயீரா நரசிம்ம ரெட்டி' படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் மலையாளத்திலும் ஒருபடத்திலும் நடிக்க கமிட்டாகியுள்ளார். ஜெயராம் நடிக்கும் படத்தில் அவருடன் சேர்ந்து நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக கேரளா சென்றவர், அங்கு சபரிமலை விவகாரம் குறித்து பேசினார். அப்போது, சபரிமலை விவகாரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் எடுத்து முடிவுகளுக்கு ஆதரவு தெரிவித்த அவர், ``ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் காலத்தில் பெண்கள் கடுமையான வலியை தாங்கிக் கொள்கின்றனர்.
மாதவிடாய் ஏன் வருகிறது என்பதும் கூட நம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான். ஒரு ஆணாக இருப்பது எளிமையானது. ஆனால் அதேநேரம் பெண்ணாக வாழ்வது அப்படி கிடையாது. சபரிமலை விவகாரத்தில் கேரள முதல்வரின் சரியான ஒரு முடிவையே எடுத்துள்ளார். இதில் ஏன் சர்ச்சைகள் எழுகின்றன என்பது தான் புரியவில்லை" எனப் பேசியிருந்தார். இவரின் கருத்துக்கு தற்போது ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ளன. பலரும் விஜய் சேதுபதியின் கருத்து குறித்து கமெண்டுகளை தட்டிவிட்டு வருகின்றனர். மகர ஜோதி தரிசனம் முடிந்து சபரிமலை ஐயப்பன் கோவில் நடை சாத்தப்பட்டுள்ளதால் கேரளா மீண்டும் அமைதி நிலைக்கு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.