`என்னை தேட வேண்டாம் நான் நண்பருடன் இருக்கிறேன் - டிக் டாக் மூலம் பழகிய சிறுமியை சீரழித்த பட்டதாரி!
சென்னை முகப்பேரைச் சேர்ந்தவர் வாணி (17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 10ம் வகுப்பு வரை படித்துள்ள வாணி நடிகையாகும் ஆசையால் சினிமா வாய்ப்பு தேடி வருகிறார்.
மேலும் இயக்குநர் ஒருவரிடம் கடந்த சில மாதங்களாக சினிமா பயிற்சி பெற்று வருகிறார். இதற்கிடையே கடந்த சனிக்கிழமை சினிமா பயிற்சி பெறுவதற்காக இயக்குநர் வீட்டுக்குச் சென்ற வாணி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த பெற்றோர்கள் வாணி பயிற்சி பெறும் இயக்குநரை தொடர்புகொண்டு விசாரித்துள்ளனர். ஆனால் வாணி மதியமே கிளாஸ் முடிந்து கிளம்பியுள்ளார். இதனை அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார் அந்த இயக்குநர்.
இந்த தகவலை தெரிவித்த அடுத்த சில வினாடிகளில் வாணியிடம் இருந்து இயக்குநருக்கு எஸ்எம்எஸ் வந்துள்ளது. அதில், ``என்னைத் தேட வேண்டாம், நான் என் ஆண் நண்பருடன் மாமல்லபுரத்துக்கு வந்துள்ளேன்" என அனுப்பியுள்ளார். இந்த தகவலை வாணியின் பெற்றோரை தொடர்புகொண்டு இயக்குநர் கூற, உடனடியாக அவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். தங்கள் மகளை இளைஞர் ஒருவர் கடத்தி சென்றுள்ளார் என சென்னை பெரியமேடு காவல்நிலையத்தில் அவர்கள் புகார் கூற, போலீசார் களத்தில் இறங்கினர்.
இயக்குநருக்கு வந்த வாணியின் மொபைல் எண் சிக்னல் மூலம் அவர் எங்கு இருக்கிறார் போலீசார் ஆராய்ந்த போது அவர் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் லாட்ஜில் இருப்பது தெரியவந்தது. உடனடியாக அங்கு விரைந்த போலீசார், லாட்ஜில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு சிறுமி வாணியும், அவரது ஆண் நண்பரும் உல்லாசமாக இருந்துள்ளனர். இருவரையும் கைது செய்த போலீசார் வாணிக்கு 17 வயது என்பதால் அவரை மகளிர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பின்னர் பிடிபட்ட இளைஞரிடம் விசாரணை நடத்தினர். அதில், அந்த இளைஞர் பெயர் தயாளன் என்பதும் அவர் திருவேற்காட்டைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. எம்பிஏ முடித்துள்ள தயாளன் தனியார் நிறுவனத்தில் பெரிய பதவியில் பணி புரிந்து வருகிறார். சிறுமி வாணி சினிமா வாய்ப்புக்காக டிக் டாக் மூலம் வீடியோ எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இதனைப் பார்த்த தயாளன் வாணியுடன் நட்பாக பழகி அவருக்கு சினிமா வாய்ப்பு பெற்று தருவதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியுள்ளார். மேலும் தனக்கு தெரிந்த சினிமா இயக்குநரை அறிமுகம் செய்துவைப்பதாக கூறி மாமல்லபுரத்துக்கு வாணியை வரவளித்துள்ளார். அங்கு அவருக்கு ஆசை வார்த்தைகளை கூறி சிறுமியை சீரழித்துள்ளார். பட்டதாரி தயாளனை போக்ஸோ சட்டத்தில் கைது செய்துள்ள போலீசார் அவரை சிறையில் அடைத்துள்ளனர். டிக் டாக் போதையில் சிறுமி தனது கற்பை இழந்த சம்பவம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.