`இந்தியன் 2 படத்துக்கு ஏன் இசையமைக்கவில்லை? - ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம்
இந்தியன் 2 படத்தில் ஏன் பணிபுரியவில்லை என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கமளித்துள்ளார்.
கமல் - ஷங்கர் கூட்டணியில் ஹிட் அடித்த இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகவுள்ளது. கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க, லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் மூலம் முதல்முறையாக ஷங்கருடன் இணைகிறார் இசையமைப்பாளர் அனிருத். ரவி வர்மன் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். விரைவில் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கவுள்ளது. அதற்கான வேலைகள் தொடங்கியுள்ளன. இந்தியன் முதல் பாகத்துக்கு இசையமைத்தவர் ஏ.ஆர்.ரஹ்மான். இவரே இரண்டாம் பாகத்துக்கும் இசையமைப்பார் எனப் பேசப்பட்ட நிலையில் திடீரென அனிருத் உள்ளே வந்தது ரஹ்மான் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தது.
இந்நிலையில் இந்தியன் 2 படத்தில் ஏன் பணிபுரியவில்லை என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கமளித்துள்ளார். தனியார் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், ``இந்தியன் 2 படத்துக்கு நான் இசையமைக்க வேண்டும் என கமல்ஹாசன் கேட்டார். ஆனால் ஷங்கர் கூறவில்லை. இயக்குநர் கூறினால் தான் இசையமைக்க முடியும். ஷங்கரை பொறுத்தவரை அவர் புதுமை விரும்பி. எப்போதும் புது விஷயங்களை தேடி செல்வார் அவர். தொடர்ந்து ஒருவருடன் வேலை செய்துகொண்டிருந்தால் போர் அடிக்கும். அந்நியன், நண்பன் படங்களின் போது எங்கள் கூட்டணிக்கு சிறிய பிரேக் விடப்பட்டது. அதேபோன்று தான் தற்போதும். அவ்வளவு தான். இதில் வேறு எந்த காரணமும் கிடையாது" எனக் கூறினார்.