கொல்கத்தா காவல் ஆணையரை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை - சிபிஐ விசாரணைக்கு ஆஜராக உத்தரவு!

கொல்கத்தா நகர காவல் ஆணையர் ராஜீவ்குமாரை கைது செய்யக்கூடாது என்றும், சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாரதா சிட்பண்ட் ஊழல் விவகாரத்தில் கொல்கத்தா நகர காவல் ஆணையர் வீட்டில் சிபிஐ அதிரடியாக சோதனை நடத்த முயன்ற சம்பவத்தால் மே.வங்கத்தில் கொந்தளிப்பு ஏற் பட்டுள்ளது. சிபிஐ நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநில முதல்வர் மம்தா பானர்ஜி 3 நாட்களாக தொடர் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் கொல்கத்தா நகர காவல் ஆணையர் விசாரனைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார். ஊழல் தொடர்பான ஆதாரங்களை அழிக்கப் பார்க்கிறார்.மாநில அரசும் ராஜீவ் குமாரை பாதுகாக்க முயல்கிறது என்று உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், சிபிஐ அலுவலகத்தில் இல்லாமல் பொதுவான இடத்தில் வைத்து ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த வேண்டும். ஆனால் அவரை கைது செய்யக் கூடாது என்று உத்தரவிட்டார். மேலும் சிபிஐ விசாரணைக்கு ராஜீவ் குமார் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

 

More News >>