ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி - உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து மம்தா கருத்து!

கொல்கத்தா போலீஸ் அதிகாரியை பொதுவான இடத்தில் வைத்து விசாரிக்கலாம், ஆனால் கை செய்யக் கூடாது என்ற உச்சநீதி மன்றத் தீர்ப்பு ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

சிபிஐ விசாரணைக்கு ராஜீவ்குமார் ஒத்துழைக்க மாட்டேன் என்று ராஜீவ்குமார் ஒரு போதும் சொன்னதில்லை. சிபிஐ அலுவலத்திலோ, காவல்துறை அலுவலகத்திலோ இல்லாமல் பொதுவான இடத்தில் விசாரித்தால் வருகிறேன் என்று தான் ஆரம்பம் முதலே கூறி வந்தார். அதை விடுத்து கைது செய்யும் நோக்கில் அவருடைய வீட்டிற்கு சிபிஐ அத்துமீறி சென்றது தான் தவறு.

உச்சநீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி. நீதிமன்றங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளின் மீது இன்னும் பெரும் நம்பிக்கை உள்ளது என்றார் மம்தா .மேலும் போராட்டத்தைக் கைவிடுவது குறித்து அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் மம்தா தெரிவித்தார்.

இதனிடையே உச்சநீதிமன்றத் தீர்ப்பு மம்தாவுக்கு கிடைத்த மாபெரும் தோல்வி என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார். ராஜீவ்குமார் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்ற முறையீட்டுக்கு உச்சநீதிமன்றம் சாதகமான தீர்ப்பை வழங்கியுள்ளதால் இது சிபிஐக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

More News >>