தி.மு.க, அ.தி.மு.க.வுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை.... வீதிக்கு வந்தது ராமதாஸ்- அன்புமணி மோதல்!

லோக்சபா தேர்தலுக்காக திமுக, அதிமுகவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக பாமக இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அதிமுக, திமுக, பாஜக, தினகரன் என அனைத்து கட்சிகளுடன் தொடர்ந்து கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது பாமக. ஆனால் இதை பதிவு செய்யும் ஊடகங்களை தொடர்ந்து கடுமையாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விமர்சித்து வருகிறார்.

ராமதாஸின் மகன் டாக்டர் அன்புமணி எம்.பி.யோ கூட்டணி குறித்து தொடர்ந்து ஊடகங்களிடம் பேசி வருகிறார். சென்னையில் நேற்று பேட்டி அளித்த அன்புமணி, அதிமுகவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்றார்.

இதனைத் தொடர்ந்து இன்று டாக்டர் ராமதாஸ் தமது ட்விட்டர் பக்கத்தில், ஊடகங்கள் தரகு வேலை பார்க்கக் கூடாது என சாடினார். அதே நேரத்தில் அன்புமணியோ, திமுக- அதிமுகவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஏற்கனவே யாருடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து ராமதாஸ்- அன்புமணி இடையே தொடர்ந்து மோதல் இருந்து வருகிறது என பதிவு செய்திருந்தோம். இதை உறுதி செய்யும் விதமாக ராமதாஸ் கூட்டணி குறித்து மறுப்பதும் அன்புமணி அதற்கு எதிராக கூட்டணி குறித்து வெளிப்படையாக பேசுவதுமாக இருவரது மோதல் இப்போது வீதிக்கு வந்துவிட்டது.

More News >>