யாருக்கெல்லாம் சீட்? எப்படியெல்லாம் குழிபறிக்கலாம்? உச்சகட்ட அடிதடியில் தமிழக பாஜக
அதிமுகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடந்து வருவதில் குஷியில் இருக்கிறது பாஜக முகாம். எடப்பாடியுடன் பொன்னாரும் தமிழிசையும் அடுத்தடுத்து நடத்திய பேச்சுவார்த்தையின் மூலம் இந்த விஷயங்கள் தெளிவாகிவிட்டதாம்.
இதில் தென்சென்னை தொகுதியில் மீண்டும் இல.கணேசன் போட்டியிடலாம் என்ற தகவலை அவரது தரப்பினர் பரப்பியுள்ளனர். 75 வயதைக் கடந்தவர்களுக்கு சீட் இல்லை எனத் தலைமை முடிவு செய்துவிட்டது.
அவரது ஒரே விருப்பம், பாராளுமன்றத்துக்குள் நுழைய வேண்டும் என்பது. அதையும் சாதித்துவிட்டார். 15 மாதங்களுக்கு மேல் எம்.பியாக இருந்துவிட்டார். இந்தமுறை கே.டி.ராகவனுக்கு சீட் கொடுக்கலாம் என பொன்னார் தரப்பினர் காய்களை நகர்த்தி வருகின்றனர்.
கே.டி.ராகவனோ, ஸ்ரீபெரும்புதூர் கிடைத்தால் போதும் என நினைக்கிறாராம்.
அதிமுகவோடு கூட்டணி அமைப்பதால் நல்ல வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறலாம் எனவும் கணக்கு போடுகிறார்களாம்.
தமிழக பாஜகவில் தமிழிசை, பொன்னார், வானதி, இல.கணேசன், ஹெச்.ராஜா என ஆளுக்கொரு கோஷ்டியாக செயல்பட்டாலும், சீட் கொடுக்கும் இடத்தில் தமிழிசை இருக்கிறார். இதை விரும்பாத சிலர், டெல்லியில் முகாமிட்டு தங்களுக்கான இடத்தைப் பெறும் முடிவில் இருக்கிறார்கள்.
இதில், கோவை மாவட்டத்தில் இருந்து வானதியை, திருப்பூர் தொகுதிக்கு இடமாற்றம் செய்யும் வேலையில் சி.பி.ராதாகிருஷ்ணன் தரப்பினர் ஈடுபட்டு வருகிறார்கள். கூட்டணியே இறுதிக்கு வராத நிலையில், சீட்டுக்கான அடிதடிகள் பாஜக முகாமில் தொடங்கிவிட்டது.
- அருள் திலீபன்