பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து: 9 பேர் பரிதாப பலி
புதுடெல்லி: பவானா தொழிற்பேட்டையில் அமைந்துள்ள பிளாஸ்டிக் கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
டெல்லி, பவானா தொழிற்பேட்டையில் பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு அமைந்துள்ள பிளாஸ்டிக் கிடங்கில் இன்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதற்குள் தீ மளமளவென பரவியது.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டுவர முயன்றனர். அப்போது, தீ விபத்தில் சிக்கி 9 பேர் பரிதாபமாக பலியாயினர். மேலும், படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சிலர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்த தீ விபத்தில் மேலும் உயிர் பலி இருக்கக்கூடும் என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.