`தாயையும், மகனையும் இழந்து தவிக்கிறேன் - மேடையில் கண்ணீர் வடித்த செல்லூர் ராஜு!

அதிமுகவின் போஸ்டர் புகழ் மதுரையைச் சேர்ந்த கிரம்மர் சுரேஷ் என்பவர்.

திமுகவில் இருந்து அதிமுகவில் சேர்ந்தாலும் தான் அடிக்கும் போஸ்டர் மூலம் அக்கட்சியில் பிரபலமடைந்தார் சுரேஷ். கட்சியில் இருந்து நீக்கப்பட்டு பின்பு மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். தற்போது அமைச்சர் செல்லூர் ராஜுவின் விசுவாசியாக உள்ளார். தற்போது எம்.ஜி.ஆர். இளைஞரணியின் மாநில இணைச்செயலாளர் கிரம்மர் சுரேஷ் தனது தாயின் நினைவு நாளை நேற்று மதுரையில் நடத்தினார்.

இந்த விழாவில் கலந்துகொண்டு அமைச்சர் செல்லூர் ராஜு பேசியது அங்குள்ளவர்களை கண்ணீர் வரவழைத்தது. நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின் விழாவில் பேசிய செல்லூர் ராஜு, ''கிரம்மர் சுரேஷ் எதையும் எதிர்பார்க்காமல் ஏழை மக்களுக்கு வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார். அவரின் உதவும் குணம் யாருக்கும் வராது. என்னைக் கஷ்டப்பட்டு படிக்க வைத்து இந்த நிலைக்கு வர ஆளாக்கியவர் என் தாயார். அவர் கடந்த வருடம் மறைந்தார். என் தாய் மறைந்த வேதனையை என்னால் வெளியே காட்ட முடிவில்லை. இதேபோல பலருக்கும் உதவிக்கொண்டிருந்த என் மகனும் விபத்தில் இறந்துவிட்டான்.

அவன் இருந்திருந்தால் இன்னும் பலருக்கும் உதவிகள் செய்திருப்பான். தாயையும், மகனையும் இழந்து வேதனையில் தவித்து வருகிறேன். உதவும் குணம் கொண்ட எனது மகன் பேரில் அறக்கட்டளை வைத்து எங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறோம்" எனப் பேசிக்கொண்டிருக்கும் போதே மேடையில் வைத்து செல்லூர் ராஜு கண் கலங்கி அழுதார். நீண்ட நேரம் பேச்சு வராமல் அழுதுகொண்டே இருந்தார். வழக்கமாக செல்லூர் ராஜு கலந்துகொள்ளும் விழா ஜாலியாக இருக்கும். ஆனால் இந்த விழாவில் தன் தாயையும், மகனையும் நினைத்து அவர் அழுது பேசியது அங்கிருந்த கட்சிக்காரர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

 

More News >>