`தாத்தா டி.வி கொடுத்தாரு அப்பா செட் டாப் பாக்ஸ் கொடுப்பாரு - தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் கலகலப்பு!

தமிழகம் முழுவதும் திமுக கிராம சபை, ஊராட்சி சபை கூட்டங்களை நடத்தி வருகிறது.

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத நிலையில் கிராமங்களில் கிராமசபைக் கூட்டங்களை நடத்தி வருகிறது திமுக. இந்தக் கூட்டங்களில் ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மக்களின் குறைகளை கேட்டறிந்து வருகின்றனர். இந்தக் கூட்டங்களில் அதிமுக அரசை ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து வருகிறார். அதேநேரம் கடுமையான கேள்விகளையும் ஸ்டாலின் எதிர்கொண்டு வருகிறார். மதுக்கடைகள், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அவரிடம் கேள்வி கேட்டு வருகின்றனர். அதேபோல் இந்தக் கூட்டங்களில் சில சுவாரஸ்ய சம்பவங்களும் நடந்து வருகின்றன.

அந்தவகையில் நேற்றுமுன்தினம் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதிக்கு உட்பட்ட சத்திரப்பட்டியில் நடந்த ஊராட்சிசபை கூட்டத்தில் ஸ்டாலினுடன் ஒரு எல்.கே.ஜி படிக்கும் குழந்தையும் பேசியது. மஹிதா என்னும் அந்தக் குழந்தை, ஸ்டாலின் தாத்தா வணக்கம்” எனக் கூறியது. உடனடியாக குறுக்கிட்ட ஸ்டாலின் ``ஸ்டாலின் தாத்தா இல்லை, ஸ்டாலின் மாமா” எனக் கூறினார். அவரின் நகைச்சுவை பேச்சைக் கேட்டு மக்கள் சிரித்தனர். இந்த வீடியோ வைரலானது. அதேபோன்று ஒரு சம்பவம் மீண்டும் நடந்துள்ளது.

ஆனால் இந்த ஸ்டாலினுக்கு அல்ல. அவரின் மகன் உதயநிதிக்கு நடந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தலில் நடந்த ஊராட்சி சபை கூட்டத்தில் நேற்று உதயநிதி கலந்துகொண்டார். அப்போது அவரிடம் குறைகூறி ஒரு பெண், “கலைஞர் ஆட்சியில் இலவச டி.வி., கொடுத்தாங்க. அப்போது கேபிள் தனியார்கிட்ட இருந்தாலும் குறைஞ்ச ரூபாயில நிறைய சேனல்களை பார்த்தோம். இப்போ அப்படி இல்ல. கேபிள் டி.வி., அரசு வச்சிருந்தும், கட்டணம் கூடிருச்சு. நிறைய சேனல்கள் தெரியல. செட் டாப் பாக்ஸ் இருந்தான் சேனல்கள் தெரியும்ணு சொல்றாங்க” என்று கூறினார். இதற்கு பதிலளித்துப் பேசிய உதயநிதி, “எங்க தாத்தா டி.வி., கொடுத்தாரு. எங்க அப்பா ஆட்சிக்கு வந்தா இலவச செட் டாப் பாக்ஸ் கொடுப்பாங்க.” என்றார். அவரின் பேச்சைக் கேட்டு கூட்டத்தில் இருந்த மக்கள் சிரித்தனர்.

 

 

More News >>