தேர்தலில் போட்டியிட என் மகனுக்கு எல்லா தகுதியும் இருக்கு .... ஓபிஎஸ் பதிலடி!
அதிமுகவில் யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம் அந்த வகையில் என் மகனுக்கும் எல்லாத் தகுதிகளும் இருக்கிறது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் விருப்பமனு பெறப்பட்டு வருகிறது. தேனி தொகுதியில் போட்டியிட ஓ.பி.எஸ்.மகன் ரவீந்திரநாத்தும், சேலத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மகன் மிதுனும் விருப்ப மனு பெற்றுள்ளனர்.
ஓபிஎஸ் மகன் தேர்தலில் போட்டியிட விரும்புவது குறித்து அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன் கேள்வி எழுப்பியிருந்தார். குடும்பத்தின் பிடியிலிருந்து அதிமுக வைக் காப்பாற்ற தர்மயுத்தம் நடத்திவிட்டு இப்போது தன் மகனை தேர்தலில் போட்டியிட வைப்பது என்ன நியாயம்? ஊருக்கு ஒரு நியாயம்? ஓபிஎஸ்சுக்கு ஒரு நியாயமா? என தினகரன் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள ஓபிஎஸ், அதிமுகவில் யார் வேண்டுமானாலும் தேர்தலில் நிற்க உரிமை உள்ளது. என் மகனுக்கும் தேர்தலில் நிற்க எல்லாத் தகுதியும் இருக்கிறது. ஒருவர் அரசியலில் நீடிப்பது மக்களின் கையில்தான் உள்ளது என்றார்.