ஊராட்சி சபைகளில் உதயநிதி... சொந்த செலவில் சூனியம் வைக்கிறது திமுக... மூத்த பத்திரிகையாளர் கடும் சாடல்

திமுகவின் ஊராட்சி சபை கூட்டங்களில் உதயநிதியை முன்னிலைப்படுத்துவதை திராவிடர் இயக்க ஆதரவாளரும் மூத்த பத்திரிகையாளருமான எல்.ஆர். ஜெகதீசன் கடுமையாக சாடியுள்ளார்.

இது தொடர்பாக தமது ஃபேஸ்புக் பக்கத்தில் எல்.ஆர். ஜெகதீசன் எழுதியுள்ளதாவது:

சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வதில் திமுகவுக்கு இணை திமுக மட்டுமே. இந்த விஷயத்தில் வேறு யாரும் அவர்களை நெருங்கவே முடியாது.

திமுக சார்பில் நடத்தப்படும் கிராமசபை கூட்டங்கள் அந்த கட்சியின் வரலாற்றில் மிகப்பெரிய மைல்கல். தேர்தல் அரசியலில் masterstroke.

“மக்களிடம் செல்; மக்களிடம் கல்; மக்களை வெல்” என்ற திமுக நிறுவனர் அண்ணாவின் தாரகமந்திரத்தின் மிகப்பெரிய செயல் வடிவம். மிகவும் பாராட்டப்படவேண்டிய செயல்.

அதுவும் ஆட்சிக்கு அடிமையாய் இருப்பதே தம் பிறவிப்பெருமை என்று கூச்சமில்லாமல் நியாயப்படுத்தும் இடத்துக்கு வந்து சேர்ந்திருக்கும் 24/7 தொலைகாட்சி நெறியாளர்களால் வழிநடத்தப்படும் தமிழ்நாட்டு ஊடகங்களின் தரகு வியாபாரத்தால் திமுகவுக்கு வாக்காளர்களிடம் தினம் தினம் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் பாதிப்புக்கு நேரடியான பதிலாக இத்தகைய மக்கள் சந்திப்புகள் இருக்கும். இவை மேலும் தொடரவேண்டும். ஆட்சிக்கு வந்த பின்னும்.

உண்மையில் குக்கிராம வாக்காளர்களிடம் இது நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும். அப்படிப்பட்ட மிகப்பெரிய முன்னெடுப்பிற்குள், அந்த அடிப்படை ஜனநாயக அரசியல் narrativeக்குள் பொருந்தியே வராத உதயநிதிய கொண்டுப்போய் கூட்டத்தை சேர்த்து பிரமாண்டத்தைக் காட்டுவதாக மாவட்ட செயலாளர்கள் அலப்பறை செய்ய அனுமதிப்பது இந்த ஒட்டுமொத்த செயற்பாட்டையும் கேலிக்கூத்தாக்கிவிடும். ஏற்கனவே ஆக்கிக்கொண்டிருக்கிறது.

கலைஞர் அழகிரியையும் தயாநிதி மாறனையும் கட்சிக்குள் அண்டவிட்டதன் விளைவை நேரில் பார்த்து பட்டு அனுபவித்தபின்பும் ஸ்டாலின் உதயநிதியையும் சபரீசனையும் அடக்காமலிருப்பதும் அதிலும் உதயநிதியின் ஊராட்சிமன்ற கூட்ட அலப்பறைகளும் எந்த விதத்தில் திமுக என்கிற அரசியல் கட்சிக்கு வலு சேர்க்கும் என்பது எல்லாம்வல்ல துர்காம்பிகைக்கே வெளிச்சம். அதிலும் உதயநிதியால் ஒழுங்காக சரளமாக தமிழ் பேசத்தெரியாமல் ஆரம்பப்பள்ளி மாணவனின் ஆண்டுவிழா பேச்சுக்கணக்கில் உளறுகிறார். ல, ள உச்சரிப்புக்கொடுமைவேறு. வாயில வசம்பை வைச்சி தேய்க்கச்சொல்லுங்கள்.

எண்டிஆருக்கு ஒரு சிவபார்வதி. விஜயகாந்த்துக்கு ஒரு பிரேமலதா. தத்தம் கணவர்களின் அரசியலை இவர்கள் வலுப்படுத்தவில்லை. வலுவிழக்கச்செய்தவர்கள். பேராசை பெரு நஷ்டம் என்பதற்கான வாழும் உதாரணமாய் திகழும் பெருமாட்டிகள். அந்த வரிசையில் மு க ஸ்டாலினுக்கொரு துர்கா என்கிற கெட்டபெயரை தேடிச்சென்று சேர்த்துக்கொள்ளாமலிருப்பாராக.

பிகு: ஜெயலலிதாவுக்காக தன் தொகுதியை விட்டுத்தருவேன் என்கிற ஆட்களையெல்லாம் தேர்தல் வெற்றிக்கு நம்பும் கனிமொழிக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். தனிமனித துதிபாடல் கேட்கும்வரை காதுக்கு குளிர்ச்சியாய் இருக்கலாம். ஆனால் இறுதியில் காலைவாரிவிடும். ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் அவர்கள் உருவாக்கிய, பெரிதும் நம்பிய அடிமைகளால் நடந்ததை பார்த்தாவது திருந்துங்கள். அடிமைகளால் சூழப்பட்டவர்களுக்கு அவர்களாலேயே ஆனப்பெரிய ஆபத்து நேரும்.

இவ்வாறு எல்.ஆர். ஜெகதீசன் எழுதியுள்ளார்.

More News >>