நீதிமன்ற நடவடிக்கைகளை விமர்சிப்பதா? மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷனை கண்டித்த உச்சநீதிமன்றம்!
நீதிமன்ற நடவடிக்கைகளை பொதுவெளியில் விமர்சித்ததாக மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷன் மீது மத்திய அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. பிரசாந்த் பூஷன் விமர்சனம் செய்ததைக் கண்டித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீசும் அனுப்பினர்.
சிபிஐ தற்காலிக இயக்குநராக நாகேஸ்வரராவ் நியமிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கில், மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் பற்றி மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் டுவிட்டரில் விமர்சித்திருந்தார். உச்சநீதிமன்றத்தில் தவறான தகவல்களை கொடுத்ததாக வேணுகோபால் மீது பூஷன் குற்றம் சாட்டியிருந்தார்.
இதனால் பூஷன் மீது அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார். இந்த விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அருண்மிஸ்ரா, நவீன் சின்கா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், ஒரு வழக்கு விசாரணையில் இருக்கும் போது நீதிமன்ற நடவடிக்கைகளை மீடியாக்கள், மற்றவர்கள் விமர்சித்தாலும் ஒரு வழக்கறிஞராக விமர்சனம் செய்வதை ஏற்க முடியாது. இது குறித்து விரிவான விசாரணை நடத்த தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரசாந்த் பூஷனை கண்டித்ததுடன், அவருக்கு நோட்டீசும் வழங்கினர்.
தம் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பதிலளிக்க பிரசாந்த் பூஷன் 3 வார அவகாசம் கேட்டதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை மார்ச் 7-ந் தேதிக்கு நீதிபகிகள் ஒத்தி வைத்தனர்.