காங்., திமுகவுக்கு ஜூட்? திருநாவுக்கரசர், ரஜினிகாந்த், திருமாவளவன் ரகசிய ஆலோசனையால் பரபரப்பு!
சென்னையில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் வீட்டில் நடிகர் ரஜினிகாந்த், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் ரகசிய ஆலோசனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து அண்மையில் திருநாவுக்கரசர் தூக்கி அடிக்கப்பட்டார். திமுக கொடுத்த நெருக்கடியால்தான் ராகுல்காந்தி இம்முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
அதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சியை வெளியேற்றிவிட்டு திமுக கூட்டணியில் பாமகவை சேர்க்க வேண்டும் என அக்கட்சியின் மூத்த தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சி அதிருப்தியில் இருக்கிறது.
இதனால் தினகரன் தலைமையிலான கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் இடம்பெற வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் திருநாவுக்கரசர் வீட்டில் ரஜினிகாந்த், திருமாவளவன் ரகசிய ஆலோசனை நடத்தி உள்ளனர்.
இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தம்மை கட்சியை விட்டு நீக்கினால் ஆதரவாளர்களுடன் ரஜினிகாந்த் கட்சியில் இணைவேன் என ராகுலுக்கு மிரட்டல் விடுத்தவர்தான் திருநாவுக்கரசர். இந்த நிலையில் இந்த ரகசிய ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.
ரஜினிகாந்தின் மகள் செளந்தர்யாவுக்கு மறுமணம் நடைபெற உள்ளது. மணமகன் விசாகன் குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவர் திருநாவுக்கரசர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, ரஜினிகாந்தை திருநாவுக்கரசர் வீட்டில் சந்தித்தது எதிர்பாராதது என திருமாவளவன் விளக்கம் அளித்திருக்கிறார்.