சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதற்கு எதிரான சீராய்வு மனு மீது விசாரணை முடிந்தது - தீர்ப்பை ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்!

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று காரசார விவாதம் நடந்தது. தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கடந்த செப்டம்பர் மாதம் வரலாற்றுச் சிறப்பு தீர்ப்பை வழங்கியது. ஆனால் இந்தத் தீர்ப்புக்கு பாஜக உள்ளிட்ட இந்துத்வ அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்துக்களின் மத உணர்வுகளில் தலையிடுவதா? என்று போராட்டங்களையும் நடத்தினர்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதில் கேரள அரசு முனைப்பு காட்டியது. பெண்கள் சபரிமலை செல்ல முழு பாதுகாப்பு வழங்கப்படும் என்று கேரள அரசு அறிவித்தாலும் எதிர்ப்பு காரணமாக ஐயப்பன் கோயில் சீசன் காலத்தில் சபரிமலை வளாகமே போர்க்களமாக காட்சி யளித்தது.

இந்நிலையில் தீர்ப்பை மறு சீராய்வு செய்யக் கோரி ஐயப்ப சேவா சங்கம், நாயர் சொசைட்டி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், தனிநபர்கள் சார்பில் 60 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கலாகின.

அனைத்து சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன் நடந்தது.

அப்போது மத உணர்வுகளில் நீதிமன்றம் தலையிடக் கூடாது. தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இதற்கு கேரள தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

கேரள தேவசம் போர்டு தரப்பில் தீர்ப்பை அமல் படுத்த முதலில் அவகாசம் கோரிய நிலையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிப்பதாக தெரிவிக்கப்பட்டது.

காலை, மாலை என இரண்டு வேளை விசாரணையின் போது காரசார விவாதம் நடந்தது. விசாரணை முடிவில் தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.

More News >>