நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டி-20 போட்டி- 80 ரன் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி!

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டி-20 போட்டியில் இந்திய அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் வென்ற உற்சாகத்தில் இருந்த இந்திய அணி, இன்று முதலாவது டி-20 போட்டியில் ஆடியது. வெலிங்டனில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

நியூசி அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சேபோர்ட், முன்ரோ இருவரும் ஆரம்பம் முதலே இந்திய பந்து வீச்சை சிதறடித்து மளமளவென ரன்குவித்தனர். முன்ரோ 20 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து அவுட்டானார். அதன் பின் வந்த கேப்டன் வில்லியம்சனம் சே போர்டுடன் சேர்ந்து ரன் குவித்தார். சே போர்ட் 43 பந்துகளில் 7பவுண்டரி, 6 சிக்சர் என 84 ரன்கள் குவித்து அவுட்டானார். வில்லியம்சன் 34 ரன்கள் எடுக்க 20 ஓவர் முடிவில் நியூசிலாந்து 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்தது.

220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஆடிய இந்தியாவுக்கு ஆரம்பமே சறுக்கலானது. ரோகித் ஒரு ரன்னில் நடையைக் கட்டினார். தொடர்ந்து மந்தமான ஆட்டத்தையே வெளிப் படுத்திய இந்திய வீரர்கள் நியூசிலாந்து பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தவான்(29), சங்கர் (27),தோனி(39) குருணால் (20) மட்டுமே இரட்டை இலக்கத்தில் ரன் எடுத்து அவுட்டாக மற்றவர்கள் ஒற்றை இலக்கத்திலேயே பெவிலியன் திரும்பினார். இதனால் 19.2 ஓவர்களில் 139 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டான இந்தியா 80 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

அபாரமாக ஆடி 84 ரன்கள் எடுத்து நியூசிலாந்து வெற்றிக்கு அடித்தளம் போட்ட சேபோர்ட் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்த வெற்றி மூலம் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் 1-O என நியூசிலாந்து முன்னிலை பெற்றுள்ளது.

More News >>