நீட் தேர்வில் கடும் சோதனை இருக்கும் - சிபிஎஸ்இ எச்சரிக்கை!
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான, தேசிய அளவிலான தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எனப்படும் ‘நீட்’ தேர்வு அனைத்து மொழிகளிலும் ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எம்.பி.பி.எஸ். இடங்களும், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பி.டி.எஸ்.இடங்களும் உள்ளன. இப்படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு தேசியதகுதி மற்றும் நுழைவுத் தேர்வு ‘நீட்’ கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
அதன்படி 2018-19-ஆம் கல்வியாண்டில் மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வை, மே மாதம் நடத்தவும், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் ஓரிரு வாரத்தில் இணையதளத்தில் வெளியிட்டு, ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களைப் பெறவும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக சிபிஎஸ்இ அதிகாரிகள் கூறுகையில், ‘நீட்’ தேர்வு தொடர்பான அறிவிப்பை ஓரிரு வாரத்தில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம். கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அசாம், வங்கம் ஆகிய 10 மொழிகளில் நீட் தேர்வு நடத்தப்படும்.
தேவைப்பட்டால் இன்னும் கூடுதல் மொழிகளில் தேர்வு நடத்தப்படும். கடந்த ஆண்டு தேர்வில் ஒவ்வொரு மொழியிலும் வினாத்தாள் மாறி இருந்ததாக பல தரப்பிடம் இருந்து புகார்கள் எழுந்தன. இந்த ஆண்டு அதுபோல் நடக்காது. அனைத்து மொழிகளிலும் ஒரே மாதிரியான வினாத்தாள் இடம்பெறும். பாடத்திட்டத்தில் எந்தவித மாற்றமும் இல்லை.
கடந்த ஆண்டு தேர்வு எழுத வந்த மாணவர்களிடம் சோதனை நடத்தப்பட்டதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். மாணவர்கள் தேர்வில் முறைகேடில் ஈடுபடுவதைத் தடுக்கவே சோதனை நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டும் தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு ஆடை கட்டுப்பாடு கண்டிப்பாக இருக்கும். தங்க நகைகள், எலக்ட்ரானிக் பொருட்கள் எதுவும் தேர்வுமையத்துக்குள் அனுமதிக்கப்படாது. கடும் சோதனைக்குப் பின்னரே மாணவ, மாணவிகள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். இதில் எந்த மாற்றமும் இல்லை” என்று தெரிவித்துள்ளனர்.