அவங்க டெபாசிட் இழக்காமல் இருக்க நாம அடிவாங்கனுமா? தமிழிசைக்குப் புரியலையே...புலம்பித் தீர்த்த எடப்பாடியார்!
மக்களவைத் தேர்தலில் அதிமுகவோடு சுமூக உடன்பாடு ஏற்பட்டுவிட்டதில் சந்தோஷத்தில் இருக்கிறார் டாக்டர் தமிழிசை. ஆனால், எடப்பாடி பழனிசாமி முகாமில் எந்த உற்சாகமும் தென்படவில்லை.
ஓ. பன்னீர்செல்வம் உட்பட சிலரது கைங்கர்யத்தால் இந்தக் கூட்டணி உருவாகிறது என்பதில் கடுகடுப்பில் இருக்கிறாராம் எடப்பாடி. அவரது அரசியல் ஆலோசகர்களும், இந்தக் கூட்டணி 40 தொகுதிகளிலும் படுதோல்வியை சந்திக்கும்.
திமுக, காங்கிரஸ் அணிக்குத்தான் மக்கள் ஓட்டு போடுவார்கள். வடக்கிலும் தெற்கிலும் அதிமுகவுக்கான செல்வாக்கில் சரிவு ஏற்பட்டாலும் கொங்கு மண்டலத்தில் உங்களுடைய செல்வாக்கு அப்படியே இருக்கிறது.
இங்கு உங்களை அசைக்க திமுகவால் முடியாது. அதனால்தான் கொங்கு மண்டலத்தில் உள்ள சாதிக்கட்சிகளிடம் திமுக பேரம் பேசுகிறது. பாஜகவோடு சேருவதால் அவர்களுக்குத்தான் லாபம்.
உங்கள் செல்வாக்கு அடிபட்டுப் போய்விடும்' என விலாவரியாக எடுத்துக் கூறியுள்ளனர். இதற்குப் பதில் கொடுத்த முதல் அமைச்சர் எடப்பாடி, இந்தக் கணக்கை நானும் புரிந்து வைத்திருக்கிறேன். தமிழிசையும் பொன்னாரும் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்.
மாநிலம் முழுக்க டெபாசிட் இழந்துவிடக் கூடாது என்பதற்காக நம்மிடம் வருகிறார்கள். அவர்களிடம் எடுத்துச் சொல்லியும் கேட்கவில்லை' என புலம்பித் தீர்த்துவிட்டராம்.