மதம் மாறுவதை தடுத்தவர் கொலையா? - திருபுவனத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!
கும்பகோணம் அருகே இந்துக்கள் மதம் மாறுவதை தடுத்த கேட்டரிங் உரிமையாளர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். கேட்டரிங் ஏஜெண்ட் தொழில் செய்து வருகிறார் ராமலிங்கம். அப்பகுதியில் நடக்கும் விஷேசங்களுக்கு கேட்டரிங் ஆர்டர் பிடித்து வந்தவர் நேற்றிரவு திருபுவனம் அருகே உள்ள தூண்டில் விநாயகன் பேட்டை என்ற இடத்தில் மர்ம நபர்கள் கொடூரமாக வெட்டியதில் படுகாயமடைந்து சரிந்து கிடந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு கும்பகோணம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ராமலிங்கம் பரிதாபமாக உயிரிழந்தார். கொலை குறித்து திருவிடைமருதூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், ``சமீபத்தில் திருபுவனம் பகுதிகளில் இந்துக்களை முஸ்லிம்கள் சிலர் மதம் மாற்றி வந்ததாகவும், அப்போது ராமலிங்கம் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட தகராறில் ராமலிங்கத்துக்கும் எதிர்தரப்பினருக்கும் முன்பகை இருந்து வந்தாக கூறப்படுகிறது. இந்த முன்பகையின் காரணமாக ராமலிங்கம் வெட்டிக் கொலை செய்யப்பட்டு இருக்கலாம்' என்கிற ரீதியில் விசாரணை நடைபெற்று வருகிறது எனப் போலீசார் கூறியுள்ளார்.
இந்த கொலை சம்பவம் திருபுவனம் பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. இதனால் தஞ்சை எஸ்பி மகேஸ்வரன், தஞ்சை சரக டிஐஜி லோகநாதன் அரியலூர் எஸ்பி. ஆகிேயோர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.