தினகரனுக்கு குக்கர் கிடைக்குமா? உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது!
டிடிவி தினகரனின் கட்சிக்கு குக்கர் சின்னம் உண்டா? இல்லையா? என்ற இறுதித் தீர்ப்பை உச்சநீதிமன்றம் வாசிக்க உள்ளது. தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வரும் என்ற நம்பிக்கை யில் அமமுகவினர் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.
ஆர்.கே.நகர் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட தினகரன் குக்கர் சின்னத்தில் அமோக வெற்றி பெற்றார்.ராசியான சின்னம் என்பதால் கட்சி தொடங்கிய நிலையில் குக்கர் சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்க தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை வைத்து முடிவு எடுக்கப்படாமல் இருந்தது..திருவாரூர் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் குக்கர் சின்னத்தை ஒதுக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
உச்ச நீதிமன்றத்தில் கடந்த வாரம் நடந்த விசாரணையில், தினகரனின் கட்சி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படவும் இல்லை. அங்கீகரிக்கப்படவும் இல்லை என்பதால் குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என்று தெரிவித்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பை உச்ச நீதிமன்ற நீதிபதி கன்வில்கர் தலைமையிலான அமர்வு இன்று வழங்குகிறது. தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்தாலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வரும் என்று தினகரன் பெரும் நம்பிக்கை தெரிவித்திருந்தார். இதனால் குக்கர் சின்னம் குறித்த தீர்ப்பு அமமுகவினரிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.