அரசர் நிர்வாணமாக திரிகிறார்!- மோடி மீது ராகுல் தாக்கு
அரசர் நிர்வாணமாக இருக்கிறார் என்பதை அவரிடம் சொல்லத்தான் யாருக்கும் தைரியமில்லை என காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
பெங்களுருவில் நடந்த 126வது அம்பேத்கார் பிறந்த நாள் மாநாட்டில் பேசிய அவர், '' கார்பரேட் நிறுவனங்கள் தவறிழைத்தால் அதை மோடி அரசு மன்னிக்கிறது. கார்பரேட் நிறுவனங்களின் கடன்களைத் தள்ளுபடி செய்கிறது. விவசாயிகளுக்கு எதுவும் செய்வதில்லை. அம்பேத்கார் வகுத்து தந்த அரசியலமைப்புச் சட்டத்தை ஆர்.எஸ்.எஸ். துணை கொண்டு அழிக்கப் பார்க்கிறார் பிரதமர் மோடி. ஒரு பத்திரிகையாளர் தன் கண் எதிரில் நடந்த விஷயங்களை எழுதமுடியவில்லை. நீதிபதிகள் மீது அழுத்தம் தரப்படுகிறது.
பிரிட்டிஷார் இந்தியாவில் கால் பதித்த போது, அனுமதித்த நாம் அதற்கான விலையைக் கொடுத்தோம். இப்போதும். நாட்டில் அதுபோலவே நடந்து கொண்டிருக்கிறது. இந்திய மக்களுக்கு பேச்சு சுதந்திரம் இல்லை. மக்களின் குரல்வளை நசுக்கப்பட்டிருக்கிறது. தாத்ரியில் முகமது இக்லாக் மாட்டுக்கறி வைத்திருந்ததற்காக கொல்லப்பட்டார். அவர் கொல்லப்பட்டதற்காக இந்த அரசுக் கவலைப்படவில்லை. மாறாக அவர் வைத்திருந்தது மாட்டிறைச்சியா ஆட்டிறைச்சியா என ஆய்வு செய்கிறது. அரசர் நிர்வாணமாக இருக்கிறார். அவரிடம் இதையெல்லாம் சொல்லத்தான் யாருக்கும் துணிவில்லை'' எனப் பேசினார்.