ஞாபகம் வருதே.....ஞாபகம் வருதே.....20 வருடங்களுக்கு முன் இதே நாளில் சாதித்த கும்ளே!
கிரிக்கெட் வரலாற்றில் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை மொத்தமாக ஒரே வீரர் அள்ளுவது என்பது அபூர்வமான ஒன்று. இந்த சாதனையை இந்தியாவின் சுழல் மன்னன் கும்ப்ளே 20 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் தான் சாதித்தார்.
1999 பிப்ரவரி 7-ந் தேதி டெல்லி பெரோஷா கோட்லா மைதானம். பரம வைரியான பாகிஸ்தானுடனான டெஸ்ட் போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டம். 420 ரன்கள் எடுத்தால் தான் வெற்றி என்ற நிலையில் ஆட்டத்தை டிராவாவது செய்து விடலாம் என்ற எண்ண ஓட்டத்தில் பாகிஸ்தான் ஆடிக்கொண்டிருந்தது.
ஆனால் கும்ளேவின் சுழல்ஜாலம் பாகிஸ்தானின் எண்ணத்தில் மண்ணை அள்ளிப் போட்டது. சுழல் மந்திரத்தில் மளமளவென ஒட்டு மொத்த பாகிஸ்தான் வீரர்களையும் பெவிலியனுக்கு திரும்பச் செய்தார் கும்ப்ளே . 26.3 ஓவர்கள். அதில் 9 ஓவர்கள் மெய்டன். 74 ரன்களே விட்டுக் கொடுத்து 10 விக்கெட் சாதனை படைத்தார் கும்ப்ளே . இந்திய அணியும் 212 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஒரே இன்னிங்சில் 10 விக்கெட் சாதனையை அதற்கு முன் ஜிம் லேகர் என்ற வீரர் படைத்திருந்தார். இரண்டாவதாக கும்ப்ளே இந்த சாதனை படைத்த நாளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டிவிட்டரில் பதிவிட்டு அவருக்கு பெருமை சேர்த்துள்ளது.