கர்நாடகத்தில் பல்டி மேல் பல்டி - பா.ஜ.க எம்எல்ஏக்கள் 3 பேரையும் காணோம்!
கர்நாடக அரசியல் சூடாகவே உள்ளது. காங்கிரசில் 9 எம்எல்ஏக்கள் தலைமறைவான நிலையில் பாஜகவிலும் 3 எம்எல்ஏக்கள் காணாமல் போயுள்ள தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் ஆட்சி அமைந்தது முதலே குழப்பம் தான். அமைச்சர் பதவி கிடைக்காத அதிருப்தியில் காங்கிரஸ் எம்எல்ஏக்களில் சிலர் தொடர்ந்து முரண்டு பிடிக்க, அதைப் பயன்படுத்தி ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று பாஜகவும் ஒரு பக்கம் கண் கொத்தி பாம்பாக சமயம் பார்த்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் நேற்று பட்ஜெட் கூட்டத் தொடர் ஆரம்பமானது. கொறடா உத்தரவு பிறப்பித்தும் காங்கிரசின் 9 எம்எல்ஏக்கள் ஆஜராகவில்லை. இதை சாக்காக வைத்து மெஜாரிட்டி இல்லாத அரசின் உரையைப் படிக்கக் கூடாது என ஆளுநரையே உரை வாசிக்க விடாமல் பாஜக எம்எல்ஏக்கள் தடுத்தனர்.
இந்த களேபாரத்திலும் பாஜக தலைவர் எடியூரப்பா சோகமாக காணப்பட்டதுடன் தனது கட்சி எம்எல்ஏக்கள் தலையை எண்ணியுள்ளார். அப்போது பாஜக எம்எல்ஏக்கள் 3 பேர் குறைய அதிர்ச்சியில் யார்? யார்? என லிஸ்ட் எடுத்துள்ளார். அந்த 3 பேரில் கருணாகர ரெட்டி என்ற எம்எல்ஏ பகிரங்கமாகவே கட்சி மாறப்போவதாக மிரட்டல் விட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கலின் போதும் பாஜக தரப்பு ரகளையில் ஈடுபடும் என்று தெரிகிறது. அதற்கு இடம் கொடுக்காத வகையில் காலை காங்கிரஸ் சட்டமன்றக் குழுக் கூட்டம் நடத்தப்படுகிறது. அதில் ஆஜராகாத எம்எல்ஏக்கள் சஸ்பென்ட் செய்யப்படுவர் என்று காங்கிரஸ் கொறடா உத்தரவு பிறப்பித் துள்ளது