முதன் முறையாக இடைத்தேர்தலுக்கு வேட்பாளர் புகைப்படத்துடன் வாக்குப்பதிவு இயந்திரம்

இந்தியாவிலேயே முதன் முறையாக ராஜஸ்தான் மாநில இடைத்தேர்தலில் வேட்பாளரின் புகைப்படத்துடன் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தின் இரண்டு நாடாளுமன்ற மற்றும் ஒரு சட்டமன்ற தொகுதிகளுக்கு ஜனவரி 29ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. சன்வர்லால் ஜட், சந்த் நாத், சட்டமன்ற உறுப்பினர் கீர்த்தி குமாரி ஆகியோரது மரணத்தை தொடர்ந்து இங்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இவர்கள் அனைவரும் அங்கு ஆளும் பாஜகவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் புகைப்படத்துடன் கூடிய வாக்குப்பதிவு இயந்திரம் தயாராகவுள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி அஸ்வினி பகத், செய்தியாளர்களிடம் கூறுகையில், ”இந்த 3 இடங்களுக்குமான இடைத்தேர்தலை அமைதியான முறையில் நடத்த திட்டமிட்டுள்ளேன். அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

இம்முறை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளரின் பெயர், சின்னம் ஆகியவற்றுடன் அவரது புகைப்படத்தையும் இணைக்கவுள்ளோம். ஒரே பெயர் கொண்ட வேட்பாளர்களுக்கு இடையிலான குழப்பத்தினை தவிர்க்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது” என்றார்.

முன்னதாக, டோல்பூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் இதேபோன்று வேட்பாளரின் புகைப்படத்துடன் கூடிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதன்முறையாக பயன்படுத்தப்பட்டது. இருந்தபோதிலும் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு இதுபோன்று பயன்படுத்துவது இதுவே முதன்முறையாகும்.

More News >>