கையில் கறைபடிந்து விடக்கூடாது என்பதால் தனித்தே போட்டி - கமலஹாசன் தடாலடி!

அதிமுகவுடனோ, திமுகவுடனோ கூட்டணி கிடையாது. அவசரப்பட்டு கை குலுக்கி கறைபடிந்து விடக் கூடாது என்ற எச்சரிக்கையுடன் மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் அதிரடியாக அறிவித்துள்ளார்.

புதிதாக மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கியுள்ள நடிகர் கமலஹாசன் சுறுசுறுப்பாக கட்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். வரப்போகும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவோம் என்று முன்னரே அறிவித்த கமல் அதற்கான ஆயத்தப் பணிகளிலும் ஈடுபட்டுள்ளார்.

தேர்தலில் கமல் தனித்துப் போட்டியிடுவாரா? கூட்டணியா? என்ற கேள்விகள் பரபரப்பாக எழுந்தது. காங்கிரசுடன் கூட்டணிப்பேச்சு நடத்துகிறார் என்றும் பேசப்பட்டது.இந்நிலையால் தேர்தலில் தனித்துப் போட்டிதான் என்று கமலஹாசன் திட்டவட்டமாக இன்று அறிவித்துவிட்டார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய கமல், திமுகவுடனோ, அதிமுகவுடனோ கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. மக்களுக்கு நல்லதை பரிமாற முற்பட்டிருக்கிறோம். அதனால் எங்கள் கையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என விரும்புகிறோம். அவசரமாக கைகுலுக்கி கறைபடிந்து விடக் கூடாது என்பதில் நாங்கள் கவனமாக உள்ளோம் என்றார் கமல்.

More News >>