`மதிய உணவுடன் ரூ.36,000 மட்டுமே செலவு - ஆடம்பர திருமணங்களுக்கு மத்தியில் மாஸ் காட்டும் ஐஏஎஸ் அதிகாரி!

திருமணம் என்றாலே உலகம் முழுவதும் அதிகமாக தொகை செலவு செய்யப்படுவது வழக்கமாகி வருகிறது. இந்தியாவும் இதற்கு விதிவிலக்கு அல்ல. மற்ற நாடுகளைவிட இந்தியாவில் திருமணத்துக்கு அதிகமான தொகை செலவிடப்படுகிறது. பல லட்சங்களை கொட்டி திருமண மண்டபம், அலங்காரம், சாப்பாடு, பிரம்மாண்டமாக திருமணங்களை நடத்தி வருகின்றனர் இந்தியர்கள். திருவிழா போல் திருமணங்களை நடத்துவது இன்றைய சூழலில் சகஜமாகிவிட்டது. இந்த முறைகளுக்கு நேர்மாறாக தனது மகனின் திருமணத்தை குறைந்த செலவில் மிகச் சிறப்பாக நடத்த இருக்கிறார் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர்.

இந்தப் பாராட்டைப் பெற போகிறவர் ஆந்திராவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி பட்னாலா பசந்த்குமார் தான். இவர் தற்போது விசாகப்பட்டினத்தில் நகர்ப்புற வளர்ச்சித்துறையில் பணியாற்றி வருகிறார். இவரின் மகனுக்கு வரும் 10ம் தேதி திருமணம் செய்ய நிச்சயித்துள்ளார். இந்த திருமணத்துக்கான செலவுத் தொகை எவ்வளவு தெரியுமா?. மொத்தம் 36,000 ரூபாய் மட்டுமே செலவு செய்ய உள்ளார். இந்த 36,000 ரூபாயிலும், பெண் வீட்டாரும், மாப்பிள்ளை வீட்டாரும் ஆளுக்கு 18,000 ரூபாய் என்ற விகிதத்தில் பிரித்துக்கொள்ள உள்ளனர். இந்த தொகையில் கல்யாணத்தன்று மதிய உணவும் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பசந்த்குமார் இப்படி ஆடம்பரம் இல்லாமல் திருமணம் நடத்துவது இது முதல் முறையல்ல. பசந்த்குமார் ஆந்திர கவர்னர் நரசிம்மனின் இணை செயலாளராக சில காலம் பதவி வகித்தார். அப்போது தனது மகளுக்கும் இதேபோல் 16,100 ரூபாய் செலவில் திருமணம் நடத்தி வைத்தார். அப்போது அந்த திருமணத்தில் ஆளுநர் நரசிம்மன் கலந்துகொண்டார். இப்போதும் அவரது மகன் திருமணத்திலும் கலந்துகொள்ளவுள்ளனர். கோடிகளில், லட்சங்களில் திருமணங்களை நடத்துபவர்களுக்கு மத்தியில் ஆடம்பரத்தைத் தவிர்த்து, ஒரு திருமணத்தை எப்படி சிக்கனமாக நடத்துவதற்கு பசந்த்குமார் உதாரணமாக செயல்பட்டு வருகிறார்.

More News >>