தீபிகா படுகோனேவை உயிரோடு புதைப்போம் - ராஜ்புத் தலைவர் பகிரங்க மிரட்டல்
பத்மாவத் திரைப்படம் வெளியானால், தீபிகா படுகோனே-வை உயிரோடு புதைப்போம் என்று ராஜ்புத் அமைப்பின் தலைவர் தாகூர் அபிஷேக் சோம் என்பவர் பகிரங்க கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, சாஹித் கபூர், ரன்வீர் சிங் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள திரைப்படம் பத்மாவத். சித்தூர் ராணி பத்மினியின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு, சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள இப்படம் ஜனவரி 25ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஹிந்துத்துவா அமைப்புக்களும், ராஜபுத்திர சாதியவாத அமைப்புக்களும் இப்படத்தை வெளியிடக் கூடாது என்று தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. நீதிமன்றம் மூலம் படத்திற்கு தடை வாங்கவும் அந்த அமைப்புக்கள் முயற்சி மேற்கொண்டன. அது பலிக்கவில்லை.
இந்திய தணிக்கை வாரியம் அனுமதி அளித்து விட்ட நிலையில், நாடு முழுவதும் ‘பத்மாவத்’ படத்தை வெளியிடுவதற்கு எந்த தடையும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது.
சட்டம் - ஒழுங்கை காரணம் காட்டி, பத்மாவத் படத்தைத் திரையிடுவதற்கு, மாநில அரசுகள் தடை விதிக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது. இதனால், பத்மாவத் திரைப்படம் அறிவித்தபடி, ஜனவரி 25-ஆம் தேதி திரைக்கு வருவது உறுதியாகி இருக்கிறது.
இந்நிலையில், பத்மாவத் திரைப்படத்தை வெளியிட்டால், பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி ஆகியோரை உயிரோடு புதைப்போம் என்று ராஜபுத்திரர்கள் அமைப்பின் தலைவர் தாகூர் அபிஷேக் சோம் என்பவர் பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.