`பண பலம், கட்சிப் பதவிகள் - திருப்பத்தூர் அமமுகவினரை அதிரவைத்த ரெய்டு!
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரை அடுத்து டிடிவி தினகரன் ஆதரவாளர் வீட்டில் ஐடி ரெய்டு நடந்துள்ளது.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள சின்னக்குளம் மாரியம்மன் கோவிலைச் சேர்ந்தவர் ஞானசேகரன். டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் ஜெயலலிதா பேரவைச் செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவர் திருப்பத்தூர் பகுதியின் முக்கிய தொழிலதிபரும்கூட. திருப்பத்தூரின் முக்கிய தெருவில் பெட்ரோல் பங்க், காய்கறி சந்தை, வணிக வளாகங்கள், ரியல் எஸ்டேட் தொழில் என எப்போதும் பிஸியாக இருப்பவர் தான் இந்த ஞானசேகரன். இதுபோக ஏலகிரியில் ரிசார்ட் வாடகைக்கு விட்டுள்ளது, நகைக்கடைக்கு இடம் வாடகைக்கு விட்டுள்ளது மூலமாகவும் நல்ல பணப்புழக்கம் மனிதராகவும் அறியப்படுகிறார்.
இந்த தொழில்களில் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு சரியாக வருமான வரி கட்டாமல் சொத்துக்களை வாங்கி குவித்து வந்தாக புகார் எழுந்த வண்ணம் இருந்தன. புகாரை தொடர்ந்து அவர் வீடு, அலுவலகம், கடைகளில் நேற்று வருமான வரித்துறையினர் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். காலையில் தொடங்கிய சோதனை இரவு வரைக்கும் நீண்டுள்ளது. சோதனையின் முடிவில் ஞானசேகரன் வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக ஆவணங்களை அதிகாரிகள் அள்ளிச் சென்றனர்.
ஞானசேகரன் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசி. ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அதிமுகவின் திருப்பத்தூர் நகர்ச் செயலாளர், வேலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் பதவிகளை வகித்து வந்தார். அதன்பின்பு நடந்த கட்சிப் பிரிவில் டிடிவி தினகரன் பக்கம் சாய்ந்தார். அம்மா மக்கள் முனேற்றக் கழகம் ஆரம்பித்த பிறகுகூட கட்சிப் பதவியை வாங்கிவிட்டார். இவருக்கு கட்சிப் பதவிகள் தேடி வருவதற்கு இவரின் பண பலமே காரணமாக கூறப்படுகிறது. அந்தவகையில் தற்போது அக்கட்சியின் ஜெயலலிதா பேரவைச் செயலாளராக இருந்து வருகிறார். இவரின் வீட்டில் நடந்த அதிரடி ரெய்டு திருப்பத்தூர் அமமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.