மீண்டும் நீதிமன்றம் செல்லும் 2ஜி வழக்கு - மேல்முறையீடு செய்கிறது சிபிஐ
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் மேல்முறையீடு செய்வதற்கு மத்திய சட்ட அமைச்சகம் சிபிஐ-க்கு அனுமதி அளித்துள்ளது.
2ஜி அலைக்கற்று முறைகேடு வழக்கில், முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி. கனிமொழி, தொலைத் தொடர்பு துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெஹூரா உள்ளிட்டோரை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது.
2ஜி வழக்கில், போதிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை; சாட்சியங்கள் முறையாக விசாரிக்கப்படவில்லை என்று சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. ஷைனி குற்றம் சாட்டியிருந்தார்.
இதனை எதிர்த்து, தில்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான பணிகளில் சிபிஐ இறங்கியுள்ளது. இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக ஏற்கெனவே, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். இதுதொடர்பாக மத்தியசட்ட அமைச்சகத்தின் அனுமதி யையும் கோரியிருந்தனர்.
இந்நிலையில், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பாக, தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, மேல்முறையீடு செய்வதற்கு, மத்திய சட்ட அமைச்சகம் தற்போது அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, மேல்முறையீட்டுக் கான ஆரம்பக்கட்ட பணிகளில் சிபிஐ இறங்கியுள்ளது.