மாயாவதி சிலை வைத்த விவகாரம் : செலவழித்த அரசுப் பணத்தை திரும்பச் செலுத்த வேண்டும் -உச்ச நீதிமன்றம் அதிரடி!
உ.பி.யில் முதல்வராக இருந்த போது மாயாவதி தமது சிலைகளையும், தமது கட்சியின் சின்னமான யானை சிலைகளையும் அரசு செலவில் வைத்ததற்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும் செலவான அரசுப் பணத்தை மாயாவதி திரும்பச் செலுத்த உத்தரவு பிறப்புக்கப் போவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
உ.பி.யில் மாயாவதி முதல்வராக இருந்த போது மாநிலம் முழுவதும் தன்னுடைய சிலைகளையும், தன் கட்சியின் சின்னமான யானை சிலைகளையும் ஏராளமாக நிறுவினார். இதற்கு அப்போதே கடும் எதிர்ப்பு நிலவியது.
அரசுப்பணத்தில் சிலை வைத்துள்ளதை எதிர்த்து உ.பி.யைச் சேர்ந்த வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
சுய விளம்பரத்திற்காகவும், கட்சியை விளம்பரப்படுத்தவும் அரசுப் பணத்தை செலவிடுவதை நியாயப்படுத்த முடியாது என்று நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். செலவழிக்கப்பட்ட அரசுப் பணம் முழுவதையும் மாயாவதி திரும்பச் செலுத்த வேண்டியிருக்கும்.
இந்தப் பிரச்னையில் இன்னும் விரிவாக அலசி ஆராய வேண்டிய நிலை உள்ளது. அதனால் இறுதி உத்தரவு ஏப்ரல் 2-ந் தேதி வழங்கப்படும் என்று நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.