பிரதமர் மோடி நாளை திருப்பூர் வருகை - கறுப்புக்கொடி காட்ட வைகோவும் தயார்!
பாஜக பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை திருப்பூர் வருகிறார். மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கருப்புக்கொடி காட்டப் போவதாக அறிவித்துள்ளார்.
அரசு விழா, மற்றும் பாஜக பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நாளை திருப்பூர் வருகிறார். மதுரையில் எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழா, பாஜக பொதுக் கூட்டம் அருகருகே நடத்தப்பட்டது போலவே திருப்பூர் அருகே பெருமாநல்லூரிலும் அருகருகே தனித்தனி மேடை அமைக்கப் பட்டுள்ளது.
தனி விமானத்தில் நாளை பிற்பகல் 2 மணிக்கு கோவை வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டரில் பெருமாநல்லூர் செல்கிறார். அரசு நிகழ்ச்சியில் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். பின்னர் பிரமாண்ட பாஜக பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப் பட்டுள்ளனர். மோடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டப் போவதாக வைகோ அறிவித்துள்ளதால் போலீசார் கூடுதல் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.