குடும்பத்தினரின் கலர்புல் போட்டோ பதிவிட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஏ.ஆர்.ரஹ்மான்!
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தன் குடும்பத்தினரின் கலர்புல் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.தமது மகளை பர்தா அணிய கட்டாயப்படுத்து கிறார் என்று எழுந்த சர்ச்சைகளுக்கு பதிலடி தரும் வகையில் இந்தப் படங்களை வெளியிட்டுள்ளார்.
ஸ்லம் டாக் மில்லியனர் படத்தின் இசைக்காக ஆஸ்கர் விருது பெற்ற தன் 10-ம் ஆண்டு விழா சமீபத்தில் நடந்தது. இதில் ஏ.ஆர்.ரஹ்மானை அவருடைய மகள் கதீஜா பேட்டி எடுக்கும் நிகழ்ச்சியும் இடம் பெற்றது. பர்தா அணிந்து கதீஜா பங்கேற்றதை ஏராளமானோர் விமர்சித்தனர். ரஹ்மான் தனது மகள்களை பர்தா அணிய வற்புறுத்துகிறார். போலி வேடதாரி என்றெல்லாம் சமூக வலைதளங்களில் ஏராளமானோர் பதிவிட்டு சர்ச்சையானது.
இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் பிரபல பத்திரிகை ஒன்றின் அட்டைப்படத்திற்காக தனது மகள்கள் கதீஜா, ரஹீமா, மகன் அமீன் ஆகியோர் போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாக்ராமில் வெளியிட்டுள்ளார்.
இந்தப் படத்திலும் கதீஜா பர்தாவுடன் தான் உள்ளார். ஆனால் மற்றொரு மகள் ரஹீமா கலர்புல்லான முழு நீள உடையில் அசத்தலாகவும், மகன் அமீன் கோட்,சூட்டுடன் இடம்பெற்றுள்ளனர்.
ரஹ்மான் வெளியிட்டுள்ள மற்றொரு புகைப்படத்தில் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானியுடன், ரஹ்மானின் மனைவி, இரு மகள்கள் இடம் பெற்றுள்ளனர். இதனுடன் குடும்பத்தின் விலை மதிப்பில்லா செல்லங்கள் என்று ஏ.ஆர்.ரஹ்மான் பதிவிட்டுள்ளார்.
பர்தா சர்ச்சை வெளியாவைுடனே ரஹ்மான் மகள் கதீஜா அதனை மறுத்திருந்தார். தனக்கு பெற்றோரிடம் முழு சுதந்திரம் கிடைப்பதாகவும், எந்த விஷயத்திலும் தன்னை யாரும் கட்டாயப்படுத்தியது இல்லை என்று கூறியிருந்தார்.