இன்று ஒரே நாளில் ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகாவில் பிரதமர் மோடி விறுவிறு டூர் !
பிரதமர் மோடி நாடு முழுவதுமான தேர்தல் பிரச்சார சூறாவளி சுற்றுப்பயணத்தை தொடங்கி விட்டார். இன்று ஒரே நாளில் ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா என 3 தென் மாநிலங்களில் பாஜக கூட்டங்களில் மோடி பங்கேற்கிறார்.
மக்களவைத் தேர்தலுக்கு தேதி அறிவிக்கப்படாத நிலையில் நாடு முழுவதும் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார் பிரதமர் மோடி. மத்திய அரசின் பல்வேறு திட்டப் பணிகள் துவக்க விழா, அடிக்கல் நாட்டுவிழாக்களை அரசு விழாவாக நடத்தி அருகிலேயே பாஜக பிரச்சாரப் பொதுக் கூட்டங்களிலும் பங்கேற்கிறார் மோடி.
தேர்தல் அறிவிப்புக்கு முன் நாடு முழுவதும் தமது அரசின் சாதனைகளை கொண்டு சேர்க்கும் வகையில் மோடியின் பயணத்திட்டம் அமைந்துள்ளது. நேற்று அசாம், அருணாச்சல் என வடகிழக்கு மாநிலங்களில் டூர் அடித்த பிரதமர் மோடி இன்று 3 தென் மாநிலங்களில் பிரச்சாரம் செய்கிறார்.
ஆந்திராவின் குண்டூரில் அரசு விழா மற்றும் பாஜக பொதுக் கூட்டம் நண்பகல் 12 மணிக்கு நடைபெறுகிறது. பிற்பகல் 3 மணிக்கு தமிழகத்தின் திருப்பூரிலும், மாலையில் கர்நாடக மாநிலம் ஹூப்ளியிலும் அரசு விழா, பாஜக பிாச்சார பொதுக் கூட்டம் என்று விறுவிறு டூர் அடிக்கிறார் மோடி.
பிரதமர் மோடி வருகைக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டங்களும் நடந்து வருகிறது. நேற்றும், நேற்று முன்தினமும் அசாமில் செல்லும் இடமெல்லாம் மோடிக்கு கருப்புக்கொடி காட்டப்பட்டது. இன்று ஆந்திராவில் மோடிக்கு எதிராக ஆளும் தெலுங்கு தேசக் கட்சியே கருப்புக்கொடி போராட்டம் அறிவித்துள்ளதால் அம்மாநிலத்தில் 'கோ பேக் மோடி' கோஷம் வலுவடைந்துள்ளது.
திருப்பூரிலும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகள் கருப்புக்கொடி போராட்டம் அறிவித்துள்ளதால் பரபரப்பாகிக் கிடக்கிறது மோடியின் விறுவிறு சுற்றுப்பயணம் என்றே கூறலாம்.