மே. வங்கத்தில் எம்.எல்.ஏ. சுட்டுக் கொலை!
மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
நடியா மாவட்டத்திலுள்ள கிருஷ்ணகஞ்ச் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் சத்யஜித் பிஸ்வாஸ். சனிக்கிழமை (பிப்ரவரி 9) கொல்கத்தாவிலிருந்து 120 கி.மீ. தொலைவில் உள்ள மஜ்தியா என்ற இடத்தில் அமைப்பு ஒன்று நடத்திய சரஸ்வதி பூஜையில் அவர் கலந்து கொண்டார்.
விழாவினை விளக்கேற்றி தொடங்கி வைத்த சத்யஜித் பிஸ்வாஸ், முன் வரிசையில் அமர்ந்திருந்தார். கலை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தபோது, கூட்டத்திலிருந்து மர்ம நபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். பல குண்டுகளால் துளைக்கப்பட்ட எம்.எல்.ஏ. சத்யஜித் பிஸ்வாஸ், இரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
திரிணமூல் காங்கிரஸ் மாவட்ட தலைவர் கௌரிசங்கர் தத்தா மற்றும் மாநில அமைச்சர் ரத்னா தே நாக் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பிச் சென்றதும் இந்தக் கொடிய தாக்குதல் நடைபெற்றுள்ளது. திரிணமூல் காங்கிரஸ், இக்கொலை குறித்து பாரதீய ஜனதாவை குற்றஞ்சாட்டியுள்ளது.
சம்பவ இடத்தில் காவல்துறையினர் துப்பாக்கி ஒன்றை கைப்பற்றியுள்ளனர். விசாரணை நடந்து வருகிறது.