வருது... வருது... ட்விட்டர் பதிவை திருத்தும் வசதி!
உணர்ச்சிகர உளறல்கள்... குமுறல்கள்... தாறுமாறான தவறுகள்... பிழைகள்... இவை தற்போது சமூக வலைத்தளங்களில் தாராளமாகி விட்டன.
வெறுப்புணர்வை பரப்புவது மட்டுமின்றி, தவறான தகவல்களை நம்பி வன்முறையில் இறங்குவதும் சாதாரணமாகி விட்டது. அவசரமாக பகிர்கிறேன் என்று வார்த்தை பிழைகள், கருத்து பிழைகளோடு தப்புத்தப்பாக பதிவுகளை செய்து விட்டு பிறகு திருதிருவென்று முழிக்கும் கூட்டம் பெருகி வருகிறது.
சமூக வலைத்தளமான ட்விட்டரில் இதுவரைக்கும் பதிவுகளில் திருத்தம் செய்யும் வசதி இல்லை. தற்போது ட்விட்டர் நிறுவனம் அந்த வசதியை அறிமுகம் செய்ய இருப்பதாக அதன் தலைமை செயல் அதிகாரி ஜாக் டோர்ஸி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
'பதிவுகளில் திருத்தம் செய்யும் வசதி வேண்டும்' என்று பயனர்கள் காலங்காலமாக கோரிக்கை வைத்து வந்த நிலையில், தற்போது அதை பரிசீலிக்கும் முடிவுக்கு ட்விட்டர் நிறுவனம் வந்துள்ளது.
ட்விட்டரில் பதிவிடும்போது அதில் திருத்தம் மேற்கொள்வதற்காக 5 முதல் 30 விநாடிகள் வரைக்கும் பதிவுக்கான பெட்டி அவகாசம் அளிக்கும். பதற்றத்தில் செய்த பிழைகளை இந்நேரத்தில் திருத்திக் கொள்ளலாம்.
மேலும், ஒரு பதிவு தவறாக பகிரப்பட்டுவிட்டால், முதலாவது செய்யப்பட்ட பதிவுடன் அடுத்ததாக திருத்தம் செய்யப்பட்ட பதிவையும் பகிரக்கூடிய வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
தவறான பதிவும் திருத்தப்பட்ட பதிவும் ஒருங்கே காணக்கிடைப்பதால், எது சரி, எது தவறு என்று புரிந்துகொள்ளும் வாய்ப்பு இருக்கும். எந்த வசதி வந்தாலும், கொளுத்திப்போட வேண்டும் என்று பதிவுகளை செய்து விட்டு பின்னர் அட்மின் செய்து விட்டார் என்பவர்களை திருத்தவா முடியும்?