அடேங்கப்பா டாக்டர்ஸ் - பெண் வயிற்றுக்குள் மூன்று மாதம் இருந்த கத்திரி

ஹைதராபாத்தில் அறுவை சிகிச்சை செய்த பெண்ணின் வயிற்றுக்குள் மருத்துவர்கள் கத்திரிக்கோலை வைத்து தைத்துள்ளது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.   ஹைதராபாத்தை சேர்ந்தவர் ஹர்ஷவர்த்தன். அவரது மனைவி மகேஸ்வரி (வயது 33). மகேஸ்வரி, குடல் இறக்க பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். நிஜாம் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (NIMS) சிகிச்சைக்குச் சேர்ந்த அவருக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2ம் தேதி, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். சிகிச்சைக்கு பத்து நாள்களுக்குப் பிறகு அவர் வீட்டுக்குச் சென்றுள்ளார்.   பின்னரும் அவர் அவ்வப்போது வயிற்றுவலியினால் அவதிப்பட்டு வந்துள்ளார். வலி வரும்போதெல்லாம் வலி நிவாரணிகளை சாப்பிட்டு வந்த மகேஸ்வரிக்கு, கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 8) தாங்க முடியாத வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. மீண்டும் நிஜாம் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். எக்ஸ்ரே எடுக்கப்பட்டபோது, அடிவயிற்றில் அறுவை சிகிச்சையின்போது பயன்படுத்தப்படும் கத்திரி ஒன்று இருப்பது தெரிய வந்துள்ளது.   கடந்த நவம்பர் மாதம் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பிறகு, மகேஸ்வரி வேறு எந்த சிகிச்சையும் செய்து கொள்ளாத நிலையில், முன்பு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் கவன குறைவாக கத்திரியை உள்ளே வைத்துள்ளார்கள் என்று அவரது கணவர் ஹர்ஷவர்த்தன் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.   கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 9) அன்று மீண்டும் அறுவை சிகிச்சை செய்து மகேஸ்வரியின் வயிற்றுக்குள் இருந்த கத்திரி அகற்றப்பட்டுள்ளது. மகேஸ்வரியின் கணவர் தெரிவித்துள்ளபடி, விசாரணைக்கு ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த மருத்துவ அறிவியல் நிறுவன இயக்குநர் கே. மனோகரன், கத்திரி வெற்றிகரமாக அகற்றப்பட்டு விட்டது. வேறு எந்த உள்ளுறுப்பும் சேதமாகவில்லை என்று கூறியுள்ளார். புனிதமான மருத்துவ தொழிலின் மாண்பை குறைக்காதீங்க டாக்டர் ஐயாமாரே!
More News >>