திமுகவை கமல் விமர்சித்ததே தெரியாதாம் - கம்யூனிஸ்ட்களின் கொந்தளிப்பால் பேக் அடித்த கே.எஸ்.அழகிரி!

கமலை திமுக கூட்டணிக்கு அழைப்பு விடுத்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, இப்போது அப்படியே பின் வாங்கி கமல் மீது தாக்குதல் தொடுத்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் புதிய தலைவராக கே.எஸ் அழகிரி பொறுப்பேற்ற முதல் நாளே கமலஹாசனும் திமுக கூட்டணியில் இணைய வேண்டும் என அழைப்பு விடுத்திருந்தார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் இந்த அழைப்பு திமுக கூட்டணியில் கட்சிகளிடம் பெரும் சலசலப்பை ஏற்படுத்திவிட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், திமுக, அதிமுக ஊழல் கட்சிகள். அந்தக் கட்சி களுடன் கூட்டணி கிடையாது என்று கூறிய கமலை கூட்டணிக்கு அழைப்பு விடலாம் என்று எதிர்வினையாற்றினார். மேலும் கூட்டணி குறித்து முடிவெடுக்க வேண்டியது ஸ்டாலின் தானே தவிர, துரைமுருகன் அடிக்கடி கமெண்ட் அடிப்பதையும் குறை கூறி பகிரங்கமாக கொந்தளித்தார்.

முத்தரசன் பேட்டி வெளியானவுடனே திமுக கூட்டணியில் முட்டல் மோதல் என செய்திகள் வெளியாகி தமிழக அரசியல் வட்டாரம் பரபரத்தது.

எங்கிருந்து தான் கே.எஸ்.அழகிரிக்கு நெருக்கடி வந்ததோ தெரியவில்லை , ஆடிப் போன கே.எஸ்.அழகிரி அவசர, அவசரமாக கமல் குறித்த தமது கருத்தை வாபஸ் பெற்று பல்டி அடித்துள்ளார்.

திமுகவை கமல் விமர்சனம் செய்தது தமது கவனத்திற்கு வராததால் கமலுக்கு அழைப்பு விடுத்தேன். அதிமுக, பாஜகவுக்கு எதிரான வாக்குகள் சிதறக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் தான் அழைப்பு விடுத்தேன்.

ஆனால் திமுகவை அவசியமில்லாமல், தேவையில்லாமல் கமல் விமர்சித்திருப்பது கண்டனத்திற்குரியது. கூட்டணியில் யாரையெல்லாம் சேர்ப்பது என்பது குறித்து ஸ்டாலின் தான் முடிவெடுப்பார் என்று அழகிரி இப்போது பல்டி அடித்துள்ளார்.

கமல் விமர்சித்தது கவனத்துக்கு வரவில்லை என்று சொல்லுமளவுக்கா அழகிரி அரசியல் செய்கிறார் என்று காங்கிரசில் உள்ள எதிர்க்கோஷ்டிகள் அவருக்கு எதிராக இப்போதே வரிந்து கட்ட ஆரம்பித்துள்ளன.

More News >>