21 சட்டப்பேரவைத் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தாவிட்டால் மக்களைத் திரட்டி பெரும் போராட்டம் - எச்சரிக்கை விடுத்த மு.க.ஸ்டாலின்!
அதிமுகவுடனான கூட்டணி ஆதாயத்திற்காக பாஜக வின் பேச்சைக் கேட்டு 21 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடத்தாவிட்டால் மக்களைத் திரட்டி பெரும் போராட்டம் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,அதிமுகவுடன் கூட்டணி வைப்பதற்காக தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தல் வராமல் பார்த்துக் கொள்கிறோம் என்று பாஜக வாக்குறுதி கொடுத்துள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கிறது.
பாஜகவின் வற்புறுத்தலுக்கு பணிந்தால், ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டிய தேர்தல் ஆணையம் , ஒரு மோசமான வரலாற்றுப் பிழையை செய்து விட்ட கருப்பு அத்தியாயம் வரலாற்றில் எழுதப்பட்டு விடும். அது மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தி விடும்.
அதிமுக அரசைக் காப்பாற்ற தேர்தல் ஆணையத்தின் உதவியோடு பாஜக முயலுமானால், அதனை எதிர்த்து ஒட்டுமொத்த தமிழக மக்களைத் திரட்டி பெரும் போராட்டம் நடத்தப்படும் என்று ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.