டி-20 தொடரை இழந்தது இந்தியா - கடைசிப் போட்டியில் நியூசிலாந்து திரில் வெற்றி!
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி-20 போட்டியில் 4 ரன்? வித்தியாசத்தில் இந்தியா பரிதாபமாக தோல்வி அடைந்து தொடரையும் இழந்தது.
3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரின் முதல் இரு ஆட்டங்களில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றிருந்த நிலையில் கடைசிப் போட்டி ஹாமில்டனில் இன்று நடந்தது. வென்றால் தொடர் கை வசமாகும் என்பதால் இரு அணிகளும் கடும் பலப்பரீட்சை நடத்த ஆயத்தமாகின. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி வீரர்கள் ஆரம்பம் முதலே அதிரடி காட்டி ரன்குவிப்பில் ஈடுபட்டனர்.
சே போர்ட் (43), முன்ரோ 40 பந்துகளில் 72 ரன்கள், வில்லியம்சன் 27 ரன்கள் என அதிரடி காட்ட 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்தது.
அடுத்து ஆடிய இந்திய வீரர்களில் தவான் (5) சோபிக்கவில்லை. ரோகித் (38), சங்கர் (43) பாண்ட் (28) ஓரளவுக்கு கைகொடுத்தனர். அடுத்து பாண்ட்யா (2),தோனி அடுத்தடுத்து வீழ இந்தியா நெருக்கடிக்கு ஆளானது.
கடைசி 31 பந்துகளில் 68 ரன்கள் தேவை என்ற நெருக்கடியான கட்டத்தில் தினேஷ் கார்த்திக், குர்ணால் பாண்ட்யா ஜோடி அதிரடி காட்டி சிக்சர், பவுண்டரிகளாக விளாசி நம்பிக்கை அளித்தனர்.
கடைசி ஓவரில் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பதற்றத்தில் இளம் குர்ணால் 2 பந்துகளை வீணாக்க 11 ரன்களை மட்டுமே எடுத்த இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்த வெற்றியின் மூலம் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது. ஆட்ட நாயகனாக முன்ரோ, தொடர் நாயகனாக சே போர்ட் தேர்வு செய்யப்பட்டனர்.