இடது காலுக்குப் பதில் வலது காலில் ஆபரேசன் செய்த புத்திசாலி டாக்டர்கள் - ஒடிசாவில் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!
ஒடிசாவில் காயமடைந்த காலுக்குப் பதிலாக நல்லா இருந்த காலில் ஆபரேசன் செய்து ஒரு பெண்ணை நடக்க முடியாமல் செய்துள்ளனர் 'அதிபுத்திசாலி' டாக்டர்கள்.
ஐதராபாத்தில் பெண் ஒருவருக்கு வயிற்றில் ஆபரேசன் செய்து விட்டு கத்திரிக்கோலுடன் தைத்த சோகச் செய்தி வெளியான மறுநாளே ஒடிசாவில் மற்றொரு பெண்ணுக்கு விபரீத ஆபரேசன் செய்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.
ஒடிசா மாநிலம் அனந்தப்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் இடதுகால் காயத்திற்கு சிகிச்சை பெறச் சென்றுள்ளார் மிதா ராணி ஜேனா என்ற 40 வயதுப் பெண். காலை பரிசோதித்த டாக்டர்கள் ஆபரேசன் செய்ய முடிவு செய்துள்ளனர்.
ஆபரேசன் தியேட்டரில் அப்பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்த நர்ஸ், புண் இருந்த இடது காலுக்குப் பதிலாக வலது காலில் கட்டுப் போட்டுள்ளார். அடுத்து வந்த அதிபுத்திசாலி டாக்டரும் கண்ணை மூடிக் கொண்டு வலது காலில் ஆபரேசன் செய்து விட்டுப் போய் விட்டாராம்.
மயக்கம் தெளிந்த நோயாளிப் பெண்மணி, நல்லா இருந்த காலில் ஆபரேசன் செய்ததைக் கண்டு அலறியுள்ளார். தவறை உணர்ந்த டாக்டர்கள் மறுபடி புண் இருந்த இடது காலிலும் ஆபரேசன் செய்ய இரு கால்களிலும் பெரிய கட்டுப் போட்ட நிலையில் நடக்கவே முடியாமல் சிரமப்படுகிறார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவனோ மருத்துவமனை நிர்வாகத்தை சும்மா விட மாட்டேன் என்று மிரட்டல் விட சம்பந்தப்பட்ட டாக்டர், நர்ஸ் மீது நடவடிக்கை எடுப்பதாக அம் மாவட்ட நிர்வாகம் சமாளித்துள்ளது.