என்னைப் போய் இப்படி பேசலாமா? புதுமுக இயக்குனரின் குற்றச்சாட்டை மறுத்த நடிகர் கருணாகரன்!
புதுமுக இயக்குநர் தெரிவித்த புகாருக்கு நடிகர் கருணாகரன் விளக்கமளித்துள்ளார்.
காமெடி நடிகர் கருணாகரன் சமீபகாலமாக சர்ச்சைகளில் சிக்குவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்தவகையில் விஜய்யின் சர்கார் படம் குறித்து சர்ச்சை அளிக்கக்கூடிய வகையில் பேசிமாட்டிக்கொண்டார். அதனை தொடர்ந்து தற்போதும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். தற்போது கருணாகரன் ``பொதுநலன் கருதி" என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். புதுமுக இயக்குனர் சீயோன் இயக்கி இருந்த இத்திரைப்படம் கடந்த வாரம் திரைக்கு வந்திருந்தது.
இந்த இயக்குனர் தான் சர்ச்சைக்குரிய புகார் ஒன்றை கருணாகரன் மீது தெரிவித்திருந்தார். அதில், ``பொதுநலன் கருதி திரைப்படத்தின் விளம்பரத்துக்காக எதுவும் செய்யாத நடிகர் கருணாகரன் கந்துவட்டி கும்பலுடன் சேர்ந்து தங்களை மிரட்டுகிறார்" எனக் கூறி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். இதனை திட்டவட்டமாக மறுத்துள்ள கருணாகரன், இந்த விவகாரம் குறித்து தன்னிலை விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில், ``இயக்குனர் சீயோன் மற்றும் படத்தின் இணை இயக்குனர் கூறும் குற்றச்சாட்டுக்கள் முழுவதும் உண்மை இல்லை. பிப்ரவரி 4ம் தேதி ஆடியோ ரிலீஸ் விழாவுக்கு அவர்கள் என்னை அழைத்தே 1ம் தேதி இரவு தான். இவ்வளவு கால அவகாசம் குறைவாக உள்ள நேரத்தில் அவர்கள் என்னை அழைத்ததால் இதற்கு முன் ஒத்துக்கொண்ட பணிகளை ஒதுக்கிவைக்க முடியவில்லை. இதனை மிகத்தெளிவாக அவர்களிடம் கூறிவிட்டேன். பின்னர் படப்பிடிப்புகள் முடிந்து நான் சென்னைக்கு திரும்பியது கடந்த 8ம் தேதி தான். ஆனால் நான் ஏதோ வேண்டுமென்றே விழாவை புறக்கணித்ததாக அவர்கள் கூறுகிறார்கள். அதில் உண்மையில்லை.
அடுத்து கந்துவட்டி கும்பலை வைத்து மிரட்டியதாக கூறுகிறார்கள். எனக்கும் எந்தக் கந்துவட்டி கும்பலுக்கும் தொடர்பில்லை. ஏனெனில் நான் அப்படி வளரவில்லை. என் தந்தை காளிதாஸ் தேசத்தின் பாதுகாப்புக்காக உழைக்கும் மத்திய அரசின் முக்கிய துறையில் பணியாற்றி விருது வென்றவர். அப்படி இருக்கையில் இவர்கள் புகார் கூறுவது போல் நான் வளர்க்கப்படவில்லை. தான் நடித்த நன்றாக ஓட வேண்டும் என்பதையே ஒவ்வொரு நடிகரும் விரும்புவர். கடனால் பாதிக்கப்பட்ட பல விவசாயிகளுக்கும், புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவி இருக்கும் என்னை கந்துவட்டி கும்பலுடன் தொடர்புபடுத்தி பேசுவது வேதனை அளிக்கிறது. எனவே கந்துவட்டி கும்பலுடன் சேர்ந்துகொண்டு வன்முறையை நம்பி வாழும் தேவையில் நான் இல்லை. குறும்படம் மூலம் வெளிச்சத்துக்கு வந்த நான் புதுமுக இயக்குநருக்கு ஆதரவாக இருக்க மாட்டேனா? ``பொதுநலன் கருதி'' படம் வெற்றிபெற வாழ்த்துகிறேன்" எனக் கூறியுள்ளார்.