இஸ்லாத்துக்கு மாறவில்லை என்றால் கை,கால் வெட்டப்படும்! எழுத்தாளருக்கு மிரட்டல்!
ஆறு மாதத்திற்குள் இஸ்லாம் மதத்திற்கு மாறவில்லையென்றால் கை., கால் வெட்டப்படும் என எழுத்தாளர் ஒருவருக்கு கேரளத்தில் மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
கேரளத்தைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் கே.பி. ராமன் உன்னி. இவருக்கு மலப்புரம் மாவட்டம் மஞ்சிரா என்ற இடத்தில் இருந்து போஸ்ட் செய்யப்பட்ட கடிதத்தில் இவ்வாறு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ' அவரின் கட்டுரைகள் இஸ்லாமிய இளைஞர்களை தவறான பதைக்குத் திருப்புவதாகவும் பேராசிரியர் டி.ஜே. ஜோசப்புக்கு நிகழ்ந்தது போலவே உனக்கும் நிகழும், அதனால் ஆறு மாதத்திற்குள் நீ இஸ்லாத்தை தழுவ வேண்டும். இல்லையென்றால், உனது வலது கை இடது கால் துண்டிக்கப்படும்' எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராமனு உன்னி, கோழிக்கோடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ''மிரட்டல் விடுத்ததன் பின்னணி தெரியவில்லை'' எனவும் அவர் கூறியுள்ளார். 2010ம் ஆண்டு ஜூலை4ம் தேதி, மூவாத்துப்புழா பகுதியில் ஆலயத்துக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த பேராசிரியர் டி.ஜே. ஜோசப்பின் வலது கையை சிலர் வெட்டினர். இவர் தொடுபுழாவில் உள்ள கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் எழுத்தாளர் ராமன் உன்னிக்கும் வந்த மிரட்டல் சர்ச்சையை உண்டாக்கியிருக்கிறது.
எழுத்தாளர் ராமன் உன்னி, கேரள அரசின் சாகித்ய அகாடமி விருது பெற்றவர்.' சுஃபி பரஞ்ச கதா ' என்கிற இவரின் நாவலைத் தழுவி, முஸ்லிம் இளைஞருக்கும் இந்துப் பெண்ணுக்கிடையேயான காதலை மையமாக வைத்து மலையாள படமும் வெளி வந்துள்ளது.