கருணாநிதி தமிழர் இல்லை... குமுதம் ரிப்போர்ட்டர் மீதான குஷ்புவின் காண்டுக்கு காரணமான பேட்டி!
மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, தமிழர் இல்லை என காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு பேட்டி அளித்துள்ளதாக குமுதம் ரிப்போர்ட்டரில் இடம்பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கும் திமுகவுக்கும் இடையே பிரச்சனையை உருவாக்கவே குமுதம் இப்படி ஒரு பேட்டியை வெளியிட்டதாக ட்விட்டரில் குஷ்பு கொந்தளித்துள்ளார்.
நடிகை குஷ்பு இன்று ட்விட்டரில் குமுதம் ரிப்போர்ட்டருக்கு அளித்த பேட்டி குறித்து தொடர்ச்சியாக ட்விட்டூகளை போட்டிருந்தார். குஷ்புவின் கோபத்துக்கு காரணம், கருணாநிதி குறித்து தாம் சொல்லாத கருத்தை குமுதம் ரிப்போர்ட்டர் பதிவு செய்திருக்கிறது என்பதுதான்.
குமுதம் ரிப்போர்ட்டரில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய குஷ்புவின் பேட்டி:
கேள்வி: தமிழராக இல்லாத ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக் கூடாது என சீமான் போன்ற சிலர் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்களே?
குஷ்பு: கருணாநிதி தமிழர் கிடையாது; எம்.ஜி.ஆர். தமிழகத்தைச் சேர்ந்தவர் அல்ல. ஜெயலலிதா கர்நாடகத்தில் இருந்து வந்தவர்.
அப்படி இருக்கும் போது இதைப் பற்றிப் பேசுவது தவறானது. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் அரசியலுக்கு வரலாம்.
ஜாதி, மதம், தமிழன் என்றெல்லாம் பார்க்க முடியாது. உலகின் மிகச் சிறந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எனச் சொல்லும்போது தமிழகத்தைத்தானே கை நீட்டிக் காட்டுகிறார்கள். அரசியல் ரீத்யாக அவரை விமர்சனம் செய்யலாம். அவர் தமிழர் இல்லை என்றெல்லாம் விமர்சனம் செய்வது தவறானது.
இவ்வாறு அந்த பேட்டியில் இடம்பெற்றுள்ளது.