`காதல் அழியாது எனக் கடிதம் உறவினரின் தாக்குதல் - திருவண்ணாமலை மாணவன் கொலையா? தற்கொலையா?

காதல் அழியாது என மாணவன் ஒருவன் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டமும் தண்டராம்பட்டு அருகே உள்ள கனந்தம்பூண்டியை சேர்ந்தவர் கண்ணன் அவரது மகன் அஜித்குமார். 21 வயதாகும் அஜித் திருவண்ணாமலையில் உள்ள அரசு கல்லூரியில் 3-ம் ஆண்டு வரலாறு படித்து வந்தார். இவர் அதேபகுதியில் உள்ள தனது உறவினர் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அவருக்கு நிறைய பரிசுப்பொருட்கள் உள்ளிட்டவைகளை வாங்கி தந்துள்ளார். இவர்கள் காதல் நல்லபடியாக போய்க்கொண்டிருந்த நேரத்தில் சில நாட்களுக்கு முன் தனது கிராமத்தில் வயல் அருகே உள்ள மரத்தில் அஜித் தூக்கில் தொங்கியபடி பிணமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் அஜித்தின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பெற்றோர்கள் பைக் வாங்கித்தரவில்லை என்பதால் தற்கொலை செய்துகொண்டார். இது அஜித்தின் சாவுக்கு முதலில் கூறப்பட்ட காரணம். ஆனால் இது உண்மையான காரணம் இல்லை. அஜித்தின் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது எனக் கூறி அவரது உறவினர்கள், கல்லூரி நண்பர்கள் திடீரென சடலத்துடன் போராட்டம் நடத்தினர். அப்போது தான் அஜித்துக்கு என்ன நடந்தது முழுமையாக தெரியவந்தது. அஜித்தும் அவரது உறவினர் பெண்ணும் காதலித்து வந்த விஷயம் பெண்ணின் சித்தப்பாவுக்கு தெரியவந்ததாகவும், தற்கொலை செய்துகொள்வதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக அவர் அஜித்தை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்த விஷயத்தை அஜித்தே தனது கல்லூரி நண்பர்களுடன் சொல்லி வருத்தப்பட்டுள்ளார். சொல்லி இரண்டாவது நாளிலேயே அஜித் மர்மமான மரணமடைந்துள்ளார். இதனால் அந்த பெண்ணின் உறவினர்கள் அடித்து கொன்றிருக்கலாம் என அஜித்தின் உறவினர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால் பிரேத பரிசோதனையில் அஜித்தின் கழுத்து எலும்பு முறிந்தே இறந்துள்ளார் என்று வந்துள்ளார் என்பதால் அவரின் மரணம் தற்கொலையே என காவல்துறை கூறியுள்ளது. இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் அந்தப் பெண்ணின் உறவினர்கள் அனைவரும் தலைமறைவாகியுள்ளனர். இதனால் இந்த வழக்கு போலீஸாருக்கு சிக்கலான ஒரு வழக்காக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இதற்கிடையே சாகும் முன் அஜித் எழுதி வைத்த கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அதில், அந்தப் பெண்ணின் சித்தப்பா அடித்தாகவும், காதல் அழியாது என்றும் அவர் எழுதியுள்ளார். இந்த சம்பவம் திருவண்ணாமலைப் பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

More News >>