வேறு வழியில்லை என்றால் தனித்து போட்டி! சசிகலாவிடம் விளக்கிய தினகரன்!!
கூட்டணி தொடர்பாக பேசிக் கொண்டிருக்கிறோம். விரைவில் அறிவிப்போம் எனப் பேட்டி கொடுத்திருந்தார் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி. திமுக, அதிமுக, அமமுக என ஒரே நேரத்தில் மூன்று கட்சிகளுடன் பாமக பொறுப்பாளர்கள் கூட்டணிப் பேச்சு நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
இதில் அதிமுக பக்கம் பாமகவைக் கொண்டு வந்தார் எடப்பாடி பழனிசாமி. மோடி எதிர்ப்பு வாக்குகள் தினகரன் பக்கம் வருவதால் நமக்கு வெற்றி கிடைக்கும் என ஆளும்கட்சியினர் நினைத்தனர்.
தமாகாவும் திமுகவிடம் நெருங்கும் வேலையைச் செய்து வருகிறது. இந்தநிலையில், எந்தக் கட்சியும் இல்லாமல் தனித்துவிடப்பட்டிருக்கிறார் தினகரன். எந்த நேரத்திலும் காங்கிரஸ் பக்கம் தினகரன் தாவக் கூடும் என்பதால் உளவுத்துறை தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.
தினகரன் தனித்துப் போட்டியிட்டால், திமுக, காங்கிரஸ் கட்சிக்குப் போகக் கூடிய மோடி எதிர்ப்பு வாக்குகளை அவர் பிரிப்பார் என்பதுதான் எடப்பாடியின் எண்ணம். இப்போது மக்கள் நீதி மய்யத்தைத் தவிர வேறு எந்தக் கட்சியும் தினகரன் முன்னால் தென்படவில்லை.
ராமநாதபுரத்தில் அமமுகவுக்குச் செல்வாக்கு இருப்பதால், அந்தத் தொகுதியை கமல் குறிவைக்கலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது. திமுக, அதிமுகவில் நடக்கும் தொகுதிப் பங்கீட்டில் குளறுபடிகள் ஏற்பட்டால், அமமுகவை நோக்கி சில கட்சிகள் வரலாம் என நினைக்கிறார் தினகரன்.
இதைப் பற்றி சசிகலாவிடம் பேசியவர், திமுக இருக்கும் அணிக்குள் நாம் போக முடியாது. நம்மைத் தேடி வருகிறவர்களோடு கூட்டணி அமைப்போம். மாநிலம் முழுவதும் 70 சதவீத பூத் கமிட்டி வேலைகள் முடிந்துவிட்டது. பூத் கமிட்டிகளை வலுவாக்கிவிட்டோம். எந்தக் கட்சியும் நம்மைத் தேடி வராவிட்டாலும் தனித்துப் போட்டியிடுவோம் எனக் கூறியிருக்கிறார்.
-அருள் திலீபன்