பாமகவைவிட ஒரு தொகுதி கூடுதல்! பிரேமலதா பிளான்!!

மக்களவைத் தேர்தல் தொடர்பாக பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது தேசிய முற்போக்கு திராவிட கழகம். கடந்த தேர்தலில் 14 தொகுதிகளில் போட்டியிட்டோம் என அக்கட்சியின் துணை செயலாளர் சுதீஷ் கூறியிருப்பதை உன்னிப்பாகக் கவனித்து வருகிறார் தமிழிசை.

தேமுதிகவுக்கு 4 அல்லது 5 தொகுதிகள் என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது. அதிலும் பாமகவை விட ஒரு தொகுதியாவது கூடுதலாக வாங்கிவிட வேண்டும் என்பதில் பிரேமலதா உறுதியாக இருக்கிறாராம்.

தொகுதி செலவுகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என அதிமுக தரப்பில் உறுதி கொடுத்துவிட்டதால் டபுள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். இதுதொடர்பாக இன்று பேட்டியளித்த சுதீஷ், மக்களை தேர்தல் கூட்டணி தொடர்பாக பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அமெரிக்காவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இன்னும் 2 வாரத்தில் அவர் சென்னை திரும்பியதும் கூட்டணி தொடர்பாக இறுதி முடிவு அறிவிக்கப்படும்.

நான் போட்டியிட முடிவு செய்துள்ளேன். விஜயகாந்த் கை காட்டும் தொகுதியில் களம் இறங்குவேன்' எனக் கூறியிருக்கிறார். கடந்த முறை சேலத்தில் போட்டியிட்ட அவருக்கு இந்தமுறை சேலம் தொகுதி ஒதுக்கப்படுவதற்கு வாய்ப்பில்லை என்கிறார்கள்.

பாமகவுக்கும் சேலம் தொகுதியை விட்டுக் கொடுக்கும் முடிவில் எடப்பாடி இல்லையாம். தருமபுரி உங்களுக்கு, சேலம் எங்களுக்கு என பாமக தரப்பிடம் கறார் குரலில் கூறிவிட்டதாம் ஆளும்கட்சி. தோற்கக் கூடிய தொகுதிகளை நமக்கு ஒதுக்கிவிடக் கூடாது என்பதில் தேமுதிக தெளிவாக இருக்கிறதாம்.

-அருள் திலீபன்

More News >>